Wednesday 10 July 2013

படித்ததில் பிடித்தது ....சோம்பல்



புரிதலுக்கான...இயற்கையின் பரிசு...சோம்பல்.

சோம்பல் என்றால், சுறு சுறுப்பின் எதிர்மறை தன்மை என்று காலங்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சோம்பல் தன்மை என்பது ஒருவருக்கு இருக்கக் கூடாது என்று நன்னெறி கோட்பாடு வகுத்து தரப்பட்டுள்ளது.

ஆனால், அந்த சோம்பல் தன்மையை இல்லாமல் ஆக்கிவிட யாராலும் முடியவில்லை.

காலையில் எழுந்திருக்க சோம்பல்...
இது நாம் அனைவரும் நன்கு அறிந்த சோம்பல்.

இரவில் சீக்கிரம் தூங்க சோம்பல்...

இரவில் தாமதமாக தூங்குவதும் சோம்பல் வகையை சேர்ந்ததா?

ஆம். சோம்பலின் முழு தன்மையை; இயல்பை நாம் புரிந்து கொண்டால்,
இரவில் தாமதமாக தூங்குவதையும் சோம்பலின் தன்மையில்தான் சேர்க்க வேண்டியுள்ளது.

ஒரு காரியத்தை செய்யும் முன் நமக்கு சோம்பலாக இருக்கிறது என்று எண்ணிக்கொள்வோம்.

அப்பொழுது என்ன செய்வோம்?

அதிகம் சிந்திப்போம் என்பதை கவனிக்கவும்.

அந்த குறிப்பிட்ட காரியம் தொடர்பாக நேர்மறை, எதிர்மறை என்று சிந்தித்து, சிந்தித்து நேரத்தை கடத்துவோம்.

அச்சமயத்தில், பல எண்ணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு எண்ணக் கூட்டத்தை உருவாக்குகின்றன. இந்த எண்ணக் கூட்டத்தை மனம் என்றும் அழைக்கலாம்.

இந்த எண்ணக் கூட்டம் ஒரு சூழலை வடிவமைக்கிறது. அந்த சூழல் ஒரு திரை போல, ஒரு மேடை காட்சி போல் நமக்கு காட்சி தருகிறது.

நாமும் அந்த காட்சியை பிடித்துக் கொள்கிறோம். நமக்கென்று எந்த சுய ஆதாரமும் இல்லாததால், நமக்கு தென்படும் ஏதாவது ஒரு காட்சியை நாம் ஆதாரமாக பிடித்து தொங்கி கொள்கிறோம்.

நாம் ஒரு நிலையில் இருக்கும்போது, அந்நிலைக்கு ஏற்ப இந்த எண்ணத்தால் ஆன காட்சி அமைப்பு நமக்கு தென்படும்.

வேறு நிலைக்கு நாம் மாற நினைக்கும்பொழுது, அப்புதிய நிலைக்கு ஏற்ப காட்சி இன்னும் தோன்றவில்லை. முதல் நிலை காட்சியிலேயே இருந்துக்கொண்டு, வராத; இன்னும் உண்மையாகாத புதிய காட்சியை பற்றி நாம் சிந்திக்கிறோம்.

முதல் காட்சிக்கான எண்ணக் குவியல் (மனம்), இன்னும் வராத புதிய காட்சியை அலசுகிறது. பல 'லாஜிக்' காரணங்களை உருவாக்குகிறது.

இவ்வாறு, முதல் எண்ணக் குவியல் (மனம்) இன்னும் உண்மையாகாத புதிய காட்சியை பற்றி 'லாஜிக்குடன்' அலசும் இக்காலக் கட்டத்தையே நாம் 'சோம்பலாக' உணருகிறோம் என்பது என் பார்வை.

இங்கு இரு விசயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

ஒன்று, எண்ணக் குவியல் என்ற மனம்.

மற்றொன்று, காட்சி என்ற சூழல் மாற்றம்.

காலையில், படுக்கையில் படுத்திருக்கும்போது, எழுந்திருக்க நினைக்கிறோம். ஆனால் சோம்பலாக இருக்கிறது.

படுக்கையில் படுத்தபடி கவனியுங்கள். நம் இருப்பையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் ஒரு காட்சியமைப்பாக பாருங்கள்.

அந்த சமயத்தில், நம் மனம் வேலை செய்யும், லாஜிக்குடன்.

எழுந்து குளித்து, வேலைக்கு கிளம்பலாம் என்று ஒரு புதிய காட்சியை நாம் கற்பனை பண்ணுவோம். ஆனால், மனம் 'இன்னும் கொஞ்சம் படுத்திருக்கலாமே' என்று கூறும்.

புதிய காட்சியமைப்பை உண்மையாக்க மனம் யோசிக்கிறது. இப்படியே சிறிது நேரம் மனம் யோசிக்க, நாம் நடப்பு காட்சியமைப்பில் தொக்கி நிற்க, நாம் சுகமாக சோம்பலை அனுபவிக்கிறோம்.

இங்கு இரண்டு சாத்தியக் கூறுகள் உண்டு.

ஒன்று, புதிய காட்சியமைப்பை உண்மையாக்காமல் அப்படியே, எண்ணக் குவியலுடன் நடப்பு காட்சியமைப்பில் இருப்பது. இப்படி நீண்ட நேரம், நடப்பு காட்சியமைப்பில் தொக்கி நின்று, எண்ணக் குவியலுடன் இருந்தால், நாம் சோம்பலில் முழுமையாக வாழ்கிறோம் என்றாகிறது.

சோம்பலை முழுமையாக வாழ்ந்தால், திடிரென ஒரு நாள், நமக்கு சோம்பலை பற்றி தெளிவு கிடைக்கிறது.

அதன் பின், நாம் நினைத்தால், நடப்பு காட்சியமைப்பில் தொடர்ந்து இருக்கலாம். அல்லது எண்ணத்துக்கு வேலை கொடுக்காமல், நாமாகவே உடனே , விரும்பும் காட்சியமைப்பை உருவாக்கி மாற்றத்தை கொண்டு வரலாம்.

சோம்பலை புரிந்துக் கொண்டவுடன், சோம்பலுக்கு நாம்தான் எஜமான். நாம் விருப்பட்டால், சோம்பலை அனுபவிக்கலாம். இல்லையென்றால், அதை நகர்த்தி வைக்கலாம்.

இரண்டாவது சாத்தியக்கூறு.

நடப்பு காட்சியமைப்பில் இருக்கும்பொழுது, எண்ணத்துக்கு வேலை கொடுக்காமல், உடனே, காட்சியமைப்பை மாற்றுவது. இதை 'ஒழுக்கம்' (டிசிப்ளின்) என்று வரையறுக்கிறோம்.

இதில் விந்தை என்னவென்றால், 'டிசிப்ளின்' உடன் இருப்பவர்கள், ஒரு நெறிப் படுத்தப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள். அது நன்றுதான்.

ஆனால், சோம்பலை புரிந்துக் கொள்ளாமல், அது ஒதுக்கப் படவேண்டியது என்று கருதி அதை ஒதுக்கி விடுகிறார்கள். உலக மக்கள் அனைவரையும் ஆட்டி படைக்கும் சோம்பலை புரிந்துக் கொள்ளாமல், அப்படியே 'ஒழுக்கமற்றது' என்று ஒதுக்குவது 'சுய தேடலுக்கு' தடையாகும் போல் தெரிகிறது.

அதனால், சோம்பல் படுங்கள். அது நல்லதே! அது இயல்பானதே!

ஆனால், வெறும் சோம்பல் மட்டும் படாதீர்கள். சோம்பலை கவனியுங்கள். சோம்பலை அனுபவியுங்கள். சுய தேடலுக்கு அதன் பங்காக ஒரு சில ரகசியங்களை அது வைத்திருக்கிறது.

oரூ காட்சியமைப்பில் நின்று கொண்டு மற்றொரு காட்சியமைப்பிற்கு மாற, சிறிது கால அவகாசம் எடுத்து யோசிப்பதே சோம்பல் என்று பார்த்தோம்.

அவ்வகையில், காலையில் எழுந்திருப்பது, சோம்பலாக இருக்கிறது என்று கூறினால், சுலபமாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

இரவில், நாம் தூங்க காலம் தாழ்த்தினாலும் அதுவும், காட்சியமைப்பை மாற்ற நாம் யோசிக்கிறோம் என்றாகிறது. அதனால், தூங்கவும் நாம் சோம்பேறித்தனத்துடன் இருக்கிறோம்.

இன்று எது செய்தாலும், சுலபமான வழி, குறுக்கு வழி தேடுகிறோம். சுலபமான வழி; குறுக்கு வழி என்பது சோம்பலின் அப்பட்டமான வெளிப்பாடு.

பேனாவால் எழுதுகிறோம். மை தீர்ந்து விடுகிறது. மாற்றுப் பேனாவை, நாம் பென்சில் பையில் வைத்திருக்கிறோம். ஆனால், பென்சில் பை இருக்குமிடம் போய் மாற்றுப் பேனாவை எடுக்காமல், நாம், நம் பக்கத்தில் உள்ளவரின் பேனாவை பயன்படுத்திக் கொள்கிறோம். காட்சியமைப்பை மாற்ற விரும்பாமல், நடப்பு காட்சியமைப்பில் தொக்கி நிற்க விரும்பும் இத்தகைய செயல்கள் சோம்பலின் வெளிப்பாடாகவே எனக்கு தெரிகிறது.

அதற்கு நாம்," அவசர நேரத்தில் பிறரின் பேனாவை நாம் பயன்படுத்துவதில் தவறு இல்லையே" என்று 'லாஜிக்' காரணங்களை கூறிக் கொள்கிறோம்.

இந்த பார்வையில் பார்த்தால், நம் வாழ்வின் பெரும் பகுதியை சோம்பலுடன் தான் கழிக்கிறோம்.

அதனால், நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட சோம்பலை ஒதுக்காமல், அதில் வாழ்வோம். அதை அனுபவிப்போம். தெளிவு பெறுவோம்.

அதனால்தான் கூறுகிறேன்.

சோம்பல் என்பது...
இயற்கை நமக்கு அளித்த...
பரிசு.

No comments:

Post a Comment