Tuesday 3 May 2016

அடிமைத்தனம்


எப்போதும் பிறர் மூலமாகவே
நீங்கள் மகிழ்ச்சியோ துக்கமோ அடைகிறீர்கள்.
அவர்கள் உங்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
நீங்கள் அவர்களுடைய கை பொம்மை ஆகி விடுகிறீர்கள்.
அவர்களிடம் உங்களை ஆட்டுவிக்கும் ரிமோட் கண்ட்ரோல்
உள்ளது .
அவர்கள் சிறிது முகம் சுழித்துப் பார்ப்பது கூட
உங்களை துன்பம் அடையச் செய்யும்.
அதைப்போல அவர்களுடைய ஒரு மகிழ்ச்சியான பேச்சே
ஒரு மகிழ்ச்சியான பார்வையே
உங்களை ஆனந்தத்தில் தள்ளும்.
ஆகவே நீங்கள் அடுத்தவர் கருணையில்தான் வாழ்கிறீர்கள்.
பெரும்பான்மையோர் அடிமை வாழ்வு தான்
வாழ்கின்றனர் .
அவர்கள் உங்கள் மகிழ்ச்சி , துக்கம் , அமைதி , துயரம்
இவற்றை அவர்கள் நிர்ணயிக்கும் போது
நீங்கள் எப்படி அமைதியாக ஆனந்தமாக இருக்க முடியும்?
சுதந்திரமானவராக இருங்கள் .
உங்கள் சந்தோசம் ,மகிழ்ச்சி , ஆனந்தம் எல்லாம்
உங்களைச் சார்ந்தே இருக்கட்டும் .
அப்போது மற்றவர்கள் யாரும் உங்களை
அடிமைப் படுத்த முடியாது

ஒப்பிடுவது.....

 எதிலும் முதன்மையானவனாக "
எதிலும் உயர்வந்தனாக , முதன்மையானவனாக
இருக்கும் படி நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அது ஒருபோதும் எந்த இன்பத்தையும்தராது..
அது வன்முறையானது.
அழிவு பயப்பது.
புத்திசாலி மனிதன் உயர்வந்தனாக , முதன்மையானவனாக
இருக்க விரும்புவதில்லை .
மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி
அவர் சாதாரணமாக வாழ்கிறார்.
ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு
என்பதை அவர் அறிவார்.
அவர் ஒரு போதும் பிறருடன் ஒப்பிடுவதேயில்லை.
ஒருபோதும் தன்னை மேல் என்றோ ,கீழ் என்றோ
அவர் எண்ணுவதில்லை.
அவர் ஒருபோதும் உயர்வு மனப்பான்மையாலோ,
தாழ்வு மனப்பான்மையாலோ துன்புறுவதில்லை.
ரோஜாவை தாமரையுடன் எப்படிஒப்பிட முடியும்?
எல்லா ஒப்பீடுகளின் துவக்குமுமே தவறாக உள்ளன.
ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய
தனியழகு கொண்டிருக்கிறார்.
இவற்றை ஒப்பிடுவது சாத்தியமில்லை.
அப்படியானால் உயர்வந்தனாக , முதன்மையானவனாக
இருக்க விரும்புவதன் பொருள் என்ன?
உன்னை விட நானே உயர்வாக இருக்க வேண்டும்
என்பதே உயர்வந்தனாக இருப்பதன் பொருள்.
மற்றவர்களை விட நான் உசத்தி என்பதை
நான் நிரூபித்தாக வேண்டும்.
இதற்காக நீ ஏன் புத்தியை சக்தியை இழக்க வேண்டும்?
--- ஓஷோ ---

உனது சொந்த குரலை கண்டுபிடித்தல் OSHO

தியான யுக்தி – 1

நீ உனது சொந்த விருப்பத்தின் மூலமாக செயல்பட முடிந்தால், உனது உள்ளுணர்வு சொல்வதை தேர்ந்தெடுக்கமுடிந்தால். . . . ! உனது உள்ளுணர்வு குழந்தை பருவத்தில் மிகவும் வலிமையானதாக இருக்கும். ஆனால் வளர வளர மெதுமெதுவாக அது
வலிமையிழந்துவிடுகிறது. பெற்றோர்களின், ஆசிரியர்களின், சமுதாயத்தின், குருமார்களின் குரல் வலுத்து
ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. நீ உனது குரலை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அந்த கூட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்.
முதல்படி:
உள்ளே கவனி – இது யாருடைய குரல் ?
சில நேரங்களில் அது உனது தந்தையினுடையதாக சில சமயங்களில் அது உனது தாயினுடையதாக, சில நேரங்களில் தாத்தாவினுடையதாக, சில நேரங்களில் உனது ஆசிரியருடையதாக இருக்கலாம்.
இவையனைத்தும் வேறு வேறு விதமாக இருக்கும். அவ்வளவு சுலபமாக அடையாளம் காண முடியாத ஒரே
விஷயம்- உனது சொந்த குரல். அது எப்போதும் அடக்கி வைக்கபட்டிருக்கும். பெரியவர்கள்
சொல்வதை, குருமார்கள் சொல்வதை, ஆசிரியர்கள் சொல்வதை, கேட்கவேண்டும் என்று உனக்கு
சொல்லப்பட்டிருக்கும். ஆனால் உன்னுடைய சொந்த குரலை கவனி, அது கூறுவதை கேள் என்று உனக்கு சொல்லப்பட்டிருக்காது.
உன்னுடைய சொந்த குரல் மெலிதானதாக, கேட்கப்படாமல், இந்த கூட்ட நெரிசலில் கேட்க
முடியாதபடி அழுந்தி இருக்கும்.
அதை கேட்பது கிட்டதட்ட இயலாத செயல். முதலில் நீ இந்த குரல்களிலிருந்து வெளியேற வேண்டும், ஒரு விதமான அமைதியை, மெளனத்தை, நிசப்த்த்தை அடையவேண்டும். அப்போதுதான் அது கேட்கும், உனக்கே சொந்தமான குரல் உண்டு
என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உனக்கு தெரியும். அது அங்கே ஒரு ஆழ்நீரோட்டமாக, அடி நீரோட்டமாக இருந்துகொண்டேயிருக்கும்.
நீ உனது சொந்த விருப்பத்தை காணமுடியாவிடில், உனது வாழ்க்கை கருவறையிலிருந்து கல்லறை வரை மிக
நீண்ட ஒரு சோகமாகத் தான் இருக்கும். தன்மீது பிறர் திணிக்கும் அவர்களது
கருத்துகளை எதிர்த்து புரட்சி செய்து தங்களது விருப்பத்தின்படி வாழும் மக்களே
இந்த உலகில் ஆனந்தமாக வாழும் மக்கள். மற்றவர்களது கருத்துகள் எவ்வளவு சிறப்பானதாக
இருந்தாலும் அவை உன்னுடையதாக இல்லாதபோது அவை பயனற்றவையே. உன்னுள் உதயமாகும், உன்னுள் வளரும், உன்னுள் மலரும் கருத்துகளே அர்த்தமுள்ள கருத்துகளாகும்.
இரண்டாம்படி:
யார் பேசுவது என கவனிப்பது !
நீ என்ன பேசினாலும் செய்தாலும் நினைத்தாலும் முடிவு செய்தாலும் உன்னை நீயே கேட்டுக்கொள் : இது உன்னிடமிருந்து வருகிறதா அல்லது வேறு யாராவது பேசுகிறார்களா ?
உன்னுடைய சொந்த குரலை கண்டுபிடித்துவிட்டால் நீ ஆச்சர்யபடுவாய். உன்னுடைய தாயின் குரலை நீ திரும்பவும் கேட்பாய். தந்தையின் குரலை திரும்பவும் கேட்பாய்- அதை கண்டுபிடிப்பது கடினமானதல்ல. முதன்முறை உனக்கு கொடுக்கப்பட்ட சமயத்தில் எப்படி சொல்லப்பட்டதோ அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த
அறிவுரை, கட்டளை, ஒழுக்கம், ஆகிய எல்லாமும் – நீ குருமார்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சொந்தகாரர்கள், மற்றும் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆகிய பலரையும் நீ அங்கே காணலாம். சண்டையிட வேண்டிய அவசியமில்லை. அது உன்னுடைய குரலல்ல, வேறு யாருடையதோ – யாராயிருந்தாலும் சரி, வேறு யாரோ தான்- என்று தெரிந்துகொள், அதுவே போதும். நீ அதை
பின்பற்றமாட்டாய். அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, நன்மையோ, தீமையோ- நீ இப்போது உன் வழியே
செல்ல முடிவெடுத்துவிடுவாய். நீ
பக்குவப்பட, பண்பட ஆரம்பித்துவிடுவாய்.நீ குழந்தையாக இருந்தது போதும், நீ சார்ந்திருப்பவனாக இருந்தது
போதும். நீ இந்த குரல்களை கேட்டு கேட்டு அதை பின்பற்றுபவனாக இருந்தது
போதும்.அவா உனக்கு கொடுத்தது என்ன ? குழப்பம்தான்.
மூன்றாம் படி:
நன்றி. . . . வணக்கம்.
ஒருமுறை அது யாருடைய குரல் என்பதை நீ கண்டு கொண்டு விட்டால்
அந்த குரலுக்குரியவருக்கு நன்றி சொல், பின் உன்னை விட்டு போகச் சொல், பின் அந்த குரலுக்கு, அந்த குரல் சொல்லும் விஷயத்திற்கு வணக்கம் சொல். உனக்கு அந்த குரலை கொடுத்த
நபர் உனது விரோதியல்ல. அவருடைய குறிக்கோள் தீமை செய்வதல்ல, ஆனால் அவரது குறிக்கோள் என்ன
என்பதல்ல கேள்வி. உனது உள் மையத்திலிருந்து வராத ஏதோ ஒன்றை அவர் உன்னிடம்
பதிய வைக்கிறார் என்பதுதான் பிரச்சனை, மேலும் வெளியிலிருந்து வந்து பதியும்
எதுவுமே உன்னை மனரீதியாக அடிமைப்படுத்தும்.
ஒருமுறை அந்த குரலிடம் என்னை விட்டுவிடு என்று உறுதியாக கூறிவிட்டால், பின் நீ அதனுடன் கொண்டுள்ள தொடர்பு, நீ அதனுடன் கொண்டுள்ள அடையாளம் உடைந்துவிடும். அது உன்னுடைய குரல் என்று நீ நினைத்துக்கொண்டிருக்கும்
வரைதான் அது உன்னை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். அந்த அடையாளம்
தான் முழு பிரச்சனையே. அது உனது எண்ணமல்ல, உனது குரலல்ல, என இப்போது உனக்கு தெரியும். அது
உனது இயல்புக்கு அன்னியமானது. அதை தெரிந்துகொள்வதே போதுமானது. உன்னுள் உள்ள
அந்த குரல்களிலிருந்து நீ விடுபட்டவுடன் நீ இதுவரை கேட்டிராத மெலிதான, சிறிய குரலை கேட்கும்போது
வியப்படைவாய். . . . பின் நீ அதுதான் உனது குரல் என்று தெளிவாக
அறிந்துகொள்வாய்.
அது எப்போதுமே அங்கிருக்கிறது, ஆனால் மெலியதாக, சன்னமாக கேட்கும் ஏனெனில் அது
அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நீ குழந்தையாக இருக்கும்போது அந்த குரல் மெல்லியதாக இருக்கும், ஒரு விதை முளைவிட்டதைபோல, ஆனால் மற்ற செடிகள் அதை மறைத்து
மூடிவிட்டன. நீ இப்போது அந்த செடிகளை பார்த்து கவனித்துகொண்டிருக்கிறாய், அந்த சிறிய முளைதான் உனது வாழ்க்கை, அது இன்னும் உயிரோடு இருக்கிறது, நீ அதை கண்டுபிடிப்பதற்காக அது காத்திருக்கிறது என்பதை நீ
முற்றிலுமாக மறந்துவிட்டாய். உனது சொந்த குரலை கண்டுபிடி, பின் எந்தவித பயமும் இல்லாமல் அதை
பின்பற்று.
அது உன்னை எங்கே வழிகாட்டி கூட்டி சென்றாலும் அதுதான் உன் வாழ்வின் இலட்சியம், அதுதான் உனது இறுதிப்பாடு. அங்கே மட்டுமே நீ நிறைவடையமுடியும், திருப்தியடையமுடியும். அங்கேதான் நீ மலர்ச்சியடைவாய்- அந்த
மலர்தலில்தான் அறிதல் நிகழும்.
Source: THE REBEL

மனதை உபயோகிக்காமல் பார்த்தல்


நீ பொருட்களை எப்படி பார்க்கிறாய் என்பது உன்னைப் பொருத்தது, பொருட்களை பொருத்ததல்ல. இடைச்செருகல் செய்யும் மனதை விட்டு விட்டு நேரடியாக தனித்து பொருட்களை பார்க்கும் ஒரு நிலைக்கு வரும் வரை மனம் உன்னை மொழிபெயர்த்துக் கொண்டேதான் இருக்கும். அது நிறத்தை மாற்றும், அது பல விஷயங்களை கலந்து இடையூறு செய்யும். அவை தூய்மையானதாக இராது.

அதனால் உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. – எப்படி நீ உனது பார்வையாக மாறுவது, மனதின் துணையை எப்படி கைவிடுவது என கற்றுக் கொள்வதுதான். இந்த மனதின் கொந்தளிப்புதான் பிரச்னை. ஏனெனில் மனத்தினால் கனவுகளை மட்டும்தான் உருவாக்க முடியும். ஆனால் மனதால் மிக அழகான கனவுகளை உருவாக்க முடியும். அதனால் நீ மிகவும் கிளர்ச்சியுறுகிறாய். இந்த கிளர்ச்சியினால் அந்த கனவு உண்மை போல தோன்றுகிறது. நீ மிகவும் அதீத கிளர்ச்சியுறும்போது போதையடைந்து விடுகிறாய். நீ உணர்வோடு இல்லை. அப்போது நீ பார்ப்பது எதுவும் நீ பார்ப்பதல்ல. மேலும் எத்தனை மனம் உண்டோ அத்தனை உலகம் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு மனமும் அதன் சொந்த உலகில் வாழ்கிறது. நீ அடுத்தவரின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கலாம், ஆனால் நீ உன்னுடைய முட்டாள்தனத்தை பார்த்தே சிரிக்காத வரை நீ இயல்பானவனாகவோ, உண்மையானவனாகவோ, தாவோவின் வழி செல்பவனாகவோ ஆக முடியாது. என்ன செய்வது ?

மனதை கொண்டு வராமல் இருந்து பார்க்க முதலில் சிறிய விஷயங்களில் முயற்சி செய். ஒரு மலரை பார்க்கும் போது வெறுமனே பார். அழகு என்றோ அசிங்கம் என்றோ சொல்லாதே. வார்த்தைகளை கொண்டு வராதே. சொற்படுத்தாதே. வெறுமனே பார். மனம் மிகவும் சங்கடப்படும், அசௌகரியப்படும். ஏதாவது சொல்ல முற்படும். ‘அமைதியாக இரு, நான் பார்க்கிறேன், என்னை பார்க்க விடு’ என்று சொல்லி விடு.
முதலில் இது கடினமானதாக இருக்கும். ஆனால் உனக்கு அதிக ஈடுபாடு இல்லாத விஷயங்களில் இருந்து இதை ஆரம்பி. வார்த்தைகள் எதையும் உள்ளே கொண்டு வராமல் உனது மனைவியை பார்ப்பது கடினம். நீ உணர்வுரீதியாக இணைந்திருக்கிறாய், ஈடுபாடு கொண்டிருக்கிறாய். அன்போ, கோபமோ ஆனால் ஈடுபட்டிருக்கிறாய். நடுநிலையான விஷயங்களில் இருந்து ஆரம்பி, பின்தான் உணர்வுரீதியாக கட்டுண்டுள்ள சூழ்நிலைகளை கையாள முடியும்.

எப்போது என்னால் விஷயங்களை மனமின்றி பார்க்கமுடியும் என்று உனக்கு தோன்றுகிறதோ அதன்பின் சொந்த பிடிப்புக்கள் மீது முயற்ச்சித்துப் பார். மெது மெதுவாக அதில் திறமை வந்துவிடும். நீ மனதோடு அதிக நாட்கள் இருந்துள்ளதால் மனமின்றி ஒரு கணம் கூட இருக்க முடியாது என்றே உனக்குத் தோன்றும். மனமின்றி இருக்க முடியும் என்பதை உன்னால் நம்ப முடியாது. ஆனால் முயற்சித்துப் பார். எந்த அளவு மனதை தள்ளி வைக்கிறாயோ அந்த அளவு வெளிச்சம் உனக்குத் தெரியும். ஏனெனில் அப்போது அங்கே கனவுகள் இல்லை, எனவே கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது, ஆகாயம் உனக்கு தெரிகிறது, சூரியன் எழுகிறது, அது வந்து உன் இதயத்தை தொடுகிறது, ஒளி உன்னை வந்தடைகிறது. உனக்குள் கனவுகள் குறைய குறைய நீ சத்யத்தால் மேலும் மேலும் நிரப்பப்படுவாய்.