Tuesday 23 June 2015

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

வாத - உடல் உருவம் 

வாத, உடல் வகையை சேர்ந்தவர்களுக்கு, உடல் எடை அதிகரிப்பது கடினமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களது வளர்சிதை மாற்றமானது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க செய்யும். ஆனால், அவர்களுக்கு எலும்புகளின் வலிமை அதிகமாக இருக்கும். இவர்களது சருமம் மிகவும் வறட்சியாக இருக்கும். இவர்களது நாடி வேகமாக இருக்கும்.
இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சோர்வடையாமல் வேலை செய்வார்கள். இவர்களது தூக்கம், உறக்கம் [போன்றவை எல்லாம் சரியான நெறியில் இருக்காது. நேரம் தவறி செய்வார்கள். இவர்களது உடலுறவு தன்மை அதீத வகையில் இருக்கும்.
இவர்களது மனநிலை மிக வேகமாக மாறும். வெற்றி, தோல்வி என எந்த நிலையிலும் இவர்களது மனநிலை அதே இடத்தில தேங்கி நின்றுவிடாது. இவர்கள் எந்த விஷயத்தையும் மிக எளிதாக, விரைவாக கற்றுக்கொள்வார்கள்.
இவர்களுக்கு கூச்ச சுபாவம் இருக்கும். தன்னம்பிக்கை குறைவு. பொறுமை இருக்காது, நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவர்கள். மன அழுத்தம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிக வேகமாக பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகமாக பேசுவார்கள், கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

பித்த - உடல் உருவம்

உடல் எப்போதும் சூடாக உணரும் பண்புடையவர்கள். உடல் எடை அளவில் சரியாக இருப்பவர்கள். இவர்களுக்கு தலைமுடி நரைத்தலும், சொட்டை விழுகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு செரிமானம் இலகுவாக நடக்கும். சருமம் மென்மையாகவும், சதை போட்டும், மச்சங்கள் அதிகமாகவும் இருக்கும்.
உணவு மற்றும் உடலுறவில் மிகவும் வலிமையாக இருப்பார்கள். சுமாராக தான் தூங்குவார்கள். இவர்களை தொந்தரவு செய்வது கடினம். நாடி வலிமையாக இருக்கும்.வெயில் இவர்களுக்கு பிடிக்காது.
புத்திசாலியாக இருப்பார்கள், கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்கள், லட்சிய வெறி இருக்கும், வாழ்க்கையை விரும்பி வாழ்வார்கள், எதையும் கட்சிதமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எளிதாக எரிச்சல் அடைவார்கள்.
காதலை வெளிபடுத்த தயங்குவார்கள். பணத்தை பத்திரமாக செலவு செய்வார்கள். தலைமை குணம் இருக்கும். போராடும் குணம் உள்ளவர்கள்.
மிகவும் சத்தமாக பேசும் வழக்கு கொண்டிருப்பார்கள்.


கபம் - உடல் உருவம் 

உருவத்தில் பெரிதாக இருப்பார்கள், அகண்ட தோள் மற்றும் இடை , அடர்த்தியான் கூந்தல் மற்றும் உடல் உறுதி அதிகமாக இருக்கும். இவர்களுக்கு உடல் எடை அதிகமாகவும், பற்கள் மிக வலிமையாகவும், நாடி சரியான அளவில் இருக்கும்.
பசியின்மை குறைவாக இருக்கும், செரிமானமும் மிக மெதுவாக தான் செயல்படும். ருசியாகவும், வகை வகையான உணவுகளும் சாப்பிட விரும்புவார்கள். உடல் உழைப்பு மிகவம் குறைவாக தான் செய்வார்கள். நிறைய நேரம் தூங்கும் பண்புடையவர்கள். ஆயினும் நிறைய ஊக்குவிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
மெதுவாக கற்றுக்கொள்ளும் திறன் உடைய இவர்கள், அனைத்தையும் நினைவில் கொள்வார்கள். உணர்ச்சிகளை சமநிலையில் பாதிகப்பதில் வல்லவர்கள்
தங்களது சுற்றுவட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த நபராக இருப்பார்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்கள். உணர்ச்சிவசப்படுவதில் மெல்ல மெல்ல ஆரம்பித்து உச்சம் அடையும் பண்புடையவர்கள். குழந்தைத்தனமான, விரும்பும் வகையில் இருப்பார்கள். கூட்டமாக இருக்க விரும்புவர்கள்.
பொறுமையாகவும், அமைதியாகவும் பேசும் மனோபாவம் கொண்டவர்கள்


Wednesday 3 June 2015

தம்மபதம்

  பிறர் மீது பொறுப்பு சுமத்தாதே. அதுதான் உன்னைத் துயரத்திலேயே வைத்திருக்கிறது. பொறுப்பை ஏற்றுக் கொள். "நானே என் வாழ்வுக்குப் பொறுப்பு. வேறு யாரும் பொறுப்பல்ல. எனவே எனக்குத் துயரம் என்றால் எனக்குள்ளேயே காரணத்தைத் தேடவேண்டும். என்னவோ தவறாக இருக்கிறது. எனவேதான் என்னைச் சுற்றிலும் துயரம் நிலவ விட்டிருக்கிறேன்." என்று சதா நினைத்துக் கொண்டிரு. 

          பிரக்ஞை என்பது எந்த ஒரு காரியத்தையும் புதிய சுவை கூட்டிச் செய்வது. அதைச் செய்வதால் மட்டும் பிரக்ஞை இருக்கிறது என்று பொருளல்ல. ஆனால் உனக்குள்ளே ஒரு சாட்சி பார்த்திருக்க நீ அதைச் செய்வதில்தான் பிரக்ஞை இருக்கிறது. கவனித்துக் கொண்டு, பார்த்துக் கொண்டு, நீ அதைச் செய்து கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்துக் கொண்டு ஒரு சாட்சி உனக்குள்ளே இருக்கும்போது அதுதான் பிரக்ஞை. அபபோதுதான் மறுபிறப்பு நிகழ்கிறது. ஓஷோ. 

         ஆழ்ந்த தியானத்தில் மரணத்துக்குப் பழகிப் போகும்போது பயம் மறைந்து போய்விடுகிறது. ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, "நான் இந்த உடல் அல்ல. நான் இந்த மனம் அல்ல. பிறகு எனக்கேது மரணம்?" என்பது தெரிந்துவிடுகிறது. இந்த உடல் மண்ணோடு மண்ணாகிப் போகும் ஆனால் பிரக்ஞை என்றும் இருக்கும். அப்போது பயம் மறைந்து போய்விடுகிறது. பயம் மறைந்து விடும்போது பிறருடைய பயத்தை நீக்க வேண்டும் என்ற மகத்தான ஆசை வந்துவிடுகிறது. பயத்தில் வாழ்கிறவர்கள் துயரத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பயம் சூழ்ந்த பயங்கரமாக இருக்கிறது. ஓஷோ.

        பிரக்ஞை என்பது எந்த ஒரு காரியத்தையும் புதிய சுவை கூட்டிச் செய்வது. அதைச் செய்வதால் மட்டும் பிரக்ஞை இருக்கிறது என்று பொருளல்ல. ஆனால் உனக்குள்ளே ஒரு சாட்சி பார்த்திருக்க நீ அதைச் செய்வதில்தான் பிரக்ஞை இருக்கிறது. கவனித்துக் கொண்டு, பார்த்துக்கொண்டு, நீ அதைச் செய்து கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்துக்கொண்டு ஒரு சாட்சி உனக்குள்ளே இருக்கும்போது அதுதான் பிரக்ஞை. அப்போதுதான் மறுபிறப்பு நிகழ்கிறது. 

        கவனிப்பது என்றால் சுதாரித்து இருப்பது. கவனமாக இருப்பது. ஊக்கமாக நின்றிருப்பது மனதைக் கொண்டு எதையும் விகாரப்படுத்தாமல் வருவதை அப்படியே பெற்றுக் கொள்வது. உள்ளே எந்த இரைச்சலும் இல்லாமல் மெளனித்திருப்பது. தூங்கிக் கொண்டிருப்பதல்ல. முழுக்க விழித்திருப்பது. உன் வீடு தீப்பிடித்துக்கொண்டால் எப்படி நடந்து கொள்வாய்? தூங்குவதற்கான நேரமா அது? வீடு தீப்பற்றி எரியும்போது தூங்க முடியாது. முடியும் என்கிறாயா? வீடு தீப்பற்றி எரியும்போது தூக்கக் கலக்கத்தில் இருக்க முடியாது. வெகு சுதாரிப்போடு இருப்பாய். 

       உண்மையான சந்நியாசம் என்ன என்கிறாயா? நன்றாக சிரி. ஆனால் நீ வேறு, உன் சிரிப்பு வேறு என்பதைத் தெரிந்திரு. அழு. நன்றாக அழு. கண்ணீர் பெருகட்டும். அழுகையிலும் ஒரு முழுமை இருக்கட்டும். ஆனால் சுதாரித்திரு. உனக்குள் ஒரு சுடர் அனைத்தையும் கவனித்துக் கொண்டருக்கட்டும். 

      ஆனந்தம் உன் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. அப்படியேதான் துயரமும். ஆனந்தம் காலை நேரத்துப் பனித்துளியின் புத்துணர்ச்சியைத் தருகிறது. ஆனந்தம் உன் இளமையைத் தருகிறது. ஆனந்தம் உன் நெஞ்சை நடனமாட வைக்கிறது. சோகமும் பல பரிசுகளைத் தருகிறது. ஆனால் நீயோ சோகத்திலிருந்து தப்பித்துக்கோள்கிறாய். எனவே அதன் பரிசுகள் என்ன என்பது உனக்கு தெரிவதில்லை. சோகம் தரும் மெளனம் எந்த ஆனந்தமும் தர முடியாது. ஆனந்தம் சற்றே இரைச்சலிடுவது. சோகமோ ஆழ்ந்த மெளனத்தோடு கூடியது. ஆனந்தம் சற்றே மேடிட்டிருப்பது. சோகமோ வெகு ஆழமானது. அதில் ஆழம் இருக்கிறது. ஆனந்தம் உன்னை மறக்கடிக்க வைப்பது. ஆனந்தத்தில் முழுகிப் போவது மிகச் சுலபம். ஆனந்தப் போதையில் திளைப்பது சுலபம். ஆனந்தம் உன்னைப் பிரக்ஞை தப்பிப் போக வைக்கிறது. சோகம் உன்னை விழித்திருக்க வைக்கிறது. ஏனென்றால் அதில் நீ மூழ்கிவிட முடியாது. அதில் பங்கெடுத்துக்கொள்ளலாம். புறத்தே நின்று பார்க்க முடிகிறது. ஆனால் நீதான் அதை வேண்டாம் என்கிறாயே! 
        சாட்சியாக இருப்பதன் முதல் பாடங்களைச் சோகம் எனும் வகுப்பறைகளில் கற்றுக் கொள்கிறாய். சோகத்தில் இருக்கும்போதுதான் சாட்சியாக இருக்க முடிகிறது. போகப் போக இதே சாட்சி பாவனை ஆனந்தத்திலும் சாத்தியமாகிறது. என்னவானாலும் சரியே. சாட்சியாக இருப்பதன் மூலமே கடந்து போக முடியும். எதையும் விஞ்சி நிற்க முடியும். 

        கடவுள் ஓர் ஆளல்ல. அவர் தான் என்ற உணர்வல்ல. கடவுளைச் சந்திக்க வேண்டும் என்றால் ஓரளவுக்கு அவரைப் போலாகிப் போக வேண்டும். தான் இல்லாத நிலை. ஓர் ஆளாக இருக்காத நிலை. கடவுள் ஓர் இருப்பு. கடவுளோடு எந்த தொடர்பாவது வேண்டும் என்றால் நீயும் அப்படி ஓர் இருப்பாக மட்டுமே இருக்க தெரிந்து கொள்ள வேண்டும். ஓர் ஆளாக அல்ல. சுதாரித்தவனாக. முழுச் சுதாரிப்போடு, இருக்க வேண்டும். ஆனால் நான் என்பது கழிந்த நிலையில் இருக்க வேண்டும். 
நான் என்பதைக் கழிக்க மிகச் சிறந்த வழி தவம் செய்வதல்ல. யோகப் பயிற்சி செய்வதல்ல. விரதம் இருப்பதல்ல. இல்லவே இல்லை. சிருஷ்டிதான் அதற்கான ஒரே வழி. சிருஷ்டக்கும் போது கடவுளோடு இணைந்த நிலை பெறுகிறாய். 

       மனத்தினுள் எதையோ தேடுவதன் மீதுதான் ஆன்மீகத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள். மரணத்தைப் புரிந்து கொள்வதென்பது அனணத்தையும் புரிந்து கொள்வது. மரணத்தை அனுபவிப்பது எல்லாவற்றையும் அனுபவிப்பது. ஏனென்றால் மரணத்தை அனுபவிக்கும்போது வாழ்வின் உச்சத்தை அனுபவிப்பது மட்டுமில்லாமல், அன்பின் ஆழத்தை அனுபவிப்பது மட்டுமில்லாமல் தெய்வீகத்துக்குள் நுழைந்துவிடுகிறாய். மரணம் தெய்வீகத்தின் நுழைவாயில். மரணம் இறைவனின் ஆலயத்துக்கான நுழைவாயிலுக்கு மறுபெயர். தியானிப்பவன் தினமும் சாகிறான். 

       மெய்ஞ்ஞானி பிரக்ஞையோடு இறக்கிறான். உண்மையாக மரணம் வருமுன் மெய்ஞ்ஞானி இறந்துவிடுகிறான். அவன் தியானத்தில் இறக்கிறான். காதலர்களுக்கு இது என்ன என்று தெரியும். ஏனென்றால் சத்தியமான காதலில் பாதி மரணம் இருக்கிறது. அதனால்தான் காதல் தியானத்துக்கு வெகு அருகாமையில் இருக்கிறது. காதலிக்கத் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் தியானிப்பு இருக்கிறது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் தியானத்தைத் தெரிந்திருக்கிறார்கள். காதலர்களுக்கு மெளனம் என்றால் என்ன என்று தெரியும். அவர்களுக்கு நிச்சலனம் என்றால் என்ன என்று தெரியும். காதலர்களுக்குக் காலமற்ற நிலைதெரியும். ஆனால் போகிற போக்கில் அதைத் தெரிந்துகொண்டவர்கள். அவர்கள் அதை தேடிப் போனவர்களல்ல. 
மெய்ஞ்ஞானி பிரக்ஞையோடு சாவுக்குள் நுழைகிறார். சுவாதீனமாக நுழைகிறார். தியானம் முழுச்சாவு. சுவாதீனமான சாவு. தியானிப்பவன் தனக்குள் மரணிக்கிறான். சாவு வருமுன்னரேயே மெய்ஞ்ஞானி மரணித்துவிடுகிறார். அந்த உயரத்துக்கும் அந்த ஆழத்துக்கும் போய்வடுகிறார். போகப் போக தியானம் இயல்பாகி வடும்போது அவர் இறப்பை வாழ ஆரம்பித்துவிடுகிறார். பிறகு வாழ்வின் ஒவ்வொரு கணமும் இறப்பின் ஒரு கணமாகிப் போகிறது. ஒவ்வொரு கணமும் கடந்ததற்கு இறந்து போனவராக புத்துணர்வோடு இருக்கிறார். ஏனென்றால் கடந்ததற்கு இறந்து போகும்போது இருப்பதற்கு உயிர்ப்புப் பெறுகிறாய். 
தொடர்ந்து இறந்து கொண்டேயிருக்க அவர் விடியற்காலைப் பனித்துளி போல, தாமரை இதழ்களைப் போலப் புத்தம் புதிதாய் இருக்கிறார். அவருடைய புத்துணர்ச்சி, அவருடைய இளமை, அவருடைய காலம் கடந்திருக்கும் தன்மை, மரணிக்கும் கலையின் பாற்பட்டது. பிறகு சாவு வரும்போது அவர் பயந்து கொள்ள ஏதுமில்லை. அவர்தான் இறப்பைப் பல்லாயிரம் முறை சந்தித்திருக்கிறாரே! புளகாங்கிதம்தான். அப்படியே கிறங்கிப் போகிறார். நடனமாடுகிறார். ஆனந்தமாகச் சாக விரும்புகிறார். சாவு அவரிடம் பயத்தைத் தோற்றுவிப்பதில்லை. மாறாக மாபெரும் கவர்ச்சியைத்தான் காண்கிறார். சாவு அவரை இழுக்கிறது. 

       புத்தருடைய அகிம்சை முழுக்க வேறானது. குணவியல்பில் வேறுபட்டது. அவர் அகிம்சை பற்றிப் பேசும்போது உன்னைத் தவிர வேறு யாருமில்லை என்ற நிலையில் பேசுகிறார். யாரையாவது நோகடிப்பது என்றால் அது உன்னையே நோகடித்துக் கொள்வதாகிப் போகிறது. எதையாவது அழிக்கும்போது உன்னையே அழித்துக் கொள்வதாகிப் போகிறது. இன்னொருவருக்கு எதிரியாக இருப்பதும், வெறுப்புக் கொண்டிருப்பதும், எதிராக இருப்பதும் உன் ஜீவனுக்கு எதிராக இருப்பதாகிப் போகிறது. ஏனென்றால் அனைவருக்குள்ளும் அனைவரையும் விரவி நிற்பது ஒன்றே. 

      பிரக்ஞையோடு இறக்கும் அந்தக் கணத்தில் தியானத்தில் இறக்கும் அந்தக் கணத்தில் கடவுள் பிறக்கிறார். ஏனென்றால் தான் என்ற நீ மறைந்து போகிறாய். பிறகு இருப்பது என்ன? நிச்சலனம். சூல் கொண்ட மெளனம். முழுமையைச் சூலில் சமந்திருக்கும் மெளனம். நீ மறைந்து போகும்போது எல்லைக் கோடுகள் இல்லாமல் போகின்றன. அப்படியே இறந்துபோய் அனைவரோடும் ஐக்கியப்பட்டுப் போகிறாய். 
ஒரு சில கணங்களுக்குக் கவிஞன் மலரோடு ஐக்கியப்பட்டுப் போகிறான். சூரியோதயத்தோடு ஐக்கியப்பட்டுப் போகிறான். சிறகு விரித்துப் பறக்கும் பறவையோடு ஐக்கியப்பட்டுப் போகிறான். அவனே அணைத்தும் கூட. பிறகு எப்படி அவன் ஹிம்சிக்க முடியும்? எப்படி அவன் காயப்படுத்த முடியும்? எப்படி அவன் எதையும் அழிக்க முடியும்?
அவனுடைய வாழ்க்கை முழுக்கச் சிருஷ்டி மயம். மெய்ஞ்ஞானி முழுக்க முழுக்க ஒருசிருஷ்டிகர்த்தா. 

       அழித்தல் இயற்கையானதல்ல. சிருஷ்டி இயற்கையானது. வன்முறையல்ல. அருளே இயல்பானது. வன்முறையல்ல. அன்பே இயல்பானது.கோபமல்ல. வெறுப்பல்ல.அவை வன்முறையின் வித்துக்கள். அன்பு, அருள், பங்கீடு இவைதான் இயல்பானவை. இயற்கையாவும் இருப்பதே ஆன்மீகம். 

      விடுபட்டிருக்கும் நிச்சலனத்தைத் தெரிந்திரு. இதற்கு ஆசைகளில் இருந்து விடுபட்டிருப்பது என்ற பொருள். அப்போது அங்கே நிச்சலனம்தான். எந்த முயற்சியும் இல்லாமல் என்கிறார். ஆசையில்லாதபோது முயற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. இலக்கு இல்லையெனும்போது முயற்சி இல்லாமல் போய்விடுகிறது. லட்சியம் ஏதுமில்லையெனும்போது எதுவும் வேண்டும் என்றில்லாதபோது, இவ்வுலகத்திலும் சரி, அடுத்த உலகத்திலும் சரி, எதுவும் வேண்டாம் என்றிருக்கும்போது உனக்குள் எப்படி எந்த ஆரவாரமாவது இருக்கப் போகிறது? எல்லாமும் மெளனித்து விடுகிறது. இதுதான் உண்மையான மெளனம். 
இன்னொரு வகையான மெளனமும் இருக்கிறது. யோகாசனத்தில் அமர்ந்துவிடுவது. ஆழ்ந்து மூச்சு விடுவது. மந்திரம் ஒன்றைச் சொல்வது. மாதக் கணக்கில், வருடக்கணக்கில் மனதைக் கட்டாயப்பபடுத்திச் சும்மாயிருக்கச் சொல்வது. அப்போதும் ஒரு வகை நிச்சலனம் தோன்றும். ஆனால் அது கட்டாயத்தின் விளைவு. செயற்கையானது. உனக்குள் ஆழப் பார்க்கும்போது எல்லா ஆரவாரத்தையும் அடக்கி வைத்திருப்பது தெரிய வரும். அடியில் கிடக்கின்றன. மேற்புறத்தில் இல்லைதான். அடியே போய்த் தங்கியிருக்கின்றன. அது இன்னும் ஆபத்தானது. உணர்வின் மேல் நிலையில் இருந்தால் அதைத் தொலைத்துவிடுவது சுலபம். ஆனால் உணர்வின் ஆழத்துக்குப் போய்விட்டால் அதைத் தொலைப்பது ஏறக்குறைய முடியாத காரியமாகிப் போகிறது. 

         இயற்கையோடு போ. இயற்கையோடு இசைந்து போ. நீரோட்டத்தை எதிர்த்தன்றி நீரோட்டத்தோடு போய்க்கொண்டிரு. நதியைத் தள்ளாதே. நதியோடு மிதந்திரு. வாழ்க்கை பேரானந்தமாகிப் போகும். பரவசமாகிப் போகும். வரமாகிப்போகும். 
தூங்கும்போது பலருக்கும் பயங்கரச் சொப்பனங்கள் வருகின்றன. பலர் இந்தப் பயங்கரக் கனவுகளை என்ன செய்வது? என்று கேட்டு எழுதுகிறார்கள். இதைப்பற்றி நேரிடையாக ஏதும் செய்ய முடியாது. உன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். பகலில் நீ என்ன செய்கிறாய், என்ன நினைக்கிறாய் என்பவையே உன் இரவுக் கனவுகளை நிர்ணயிக்கின்றன. உன் இரவுகள் உன் பகல்களின் பிரதிபலிப்புகள்தான். உன் பகல் அழகாக இருந்தால், ஆனந்தமாக இருந்தால், அன்போடு இருந்தால் பயங்கரச் சொப்பனங்கள் இருக்காது. உன் பகல்கள் மெளனமாக இருந்தால், நிச்சலனத்தோடு இருந்தால், சிந்தனைகள் கழிந்திருந்தால், உள்ளீடு இல்லாமல் இருந்தால், பரிசுத்தமாக இருந்தால், முழுமையோடு இருந்தால், எந்த பதட்டமும் இல்லாமல் இருந்தால் எல்லாக் கனவுகளும் இல்லாமல் போய்விடும். கனவுகள் இல்லாத தூக்கம் கிடைக்கும். 
        மரணம் வரும்போதும் இதுதான் நடக்கிறது. உடல் விழும் போது உடனே சொர்க்கத்தைக் காண்கிறாய், சரியாக வாழ்ந்திருந்தால், சிரத்தையோடு வாழ்ந்திருந்தால், தியானித்து வாழ்ந்திருந்தால் அதுதான் நடக்கும். இல்லையேல் நரகம்தான். சொர்க்கமும் நரகமும் பூகோளத்தில் இல்லை. இந்த உடலை விட்டு நீங்கும்போது வருகின்றன. மனம் தனித்து விடப்படும்போது அமைந்து போய்விடுகிறது. மனதுக்கு எந்த வேலையும் தராமல் அப்படியே விட்டுவிட்டால் வாழ்க்கை முழுக்க எந்த விதை விதைத்தாயோ அதற்கான அறுவடையைச் செய்ய ஆரம்பித்துவிடுகிறாய்.
      மனோதத்துவமும் இதை ஏற்றுக் கொள்கிறது. ஒருவன் இறக்கும்போது உடனடியாக, செத்துக் கொண்டிருக்கும் கணங்களிலேயே கூட அவன் பயங்கரக் கனவுகளில் ஆழ்கிறான். அதாவது நரகத்தை அனுபவிக்கிறான். அல்லது அருமையான ஓரிடத்தைச் சென்று சேர்ந்துவிட்டதைப் போல உணர்கிறான். அதுவே சொர்க்கம்.
மூன்றாவது, நரகமும் இல்லை. சொர்க்கமும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. துயரமும் இல்லை. அது நிருவாணம்--மோட்சம். இதை மொழி பெயர்க்க வேறு வார்த்தை இல்லை. ஏனென்றால் இந்திய மதங்கள் தவிரப் பிற மதங்கள் இரண்டைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. சொர்க்கம், நரகம் அவ்வளவுதான். இந்த மூன்றாவது அவற்றில் இல்லை. கிறித்துவம், இஸ்லாம், யூதம் ஆகிய இவற்றில் இல்லை. மாபெரும் இந்த விஷயம் இல்லை. 
அதனால்தான் இந்த மூன்று மதங்களும் பெளத்தத்தோடு ஒப்பிடும்போது சற்றே குறைப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்கிறேன். பெளத்தம் அதி உயர்ந்த சிகரத்தைத் தொட்டுவிடுகிறது. சொர்க்கம், நரகம் இரண்டையும் தாண்டிப்போய்விடுகிறது.
பரிபூரண மெளனத்தில் ஒருவன் இறக்கலாம். முழுசுதாரிப்போடு இன்பமும் துன்பமும் இல்லாமல், ஒருவன் இறக்கலாம். அப்படியானால் அவன் மீண்டும் பிறக்கப் போவதில்லை. வாழ்வு--சாவு என்ற அசிங்கமான சுழற்சியைத் தாண்டிப் போய்விடுகிறான். பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகிப் போகிறான். பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகிப் போவது நிருவாணம். தான் என்ற ஒருவனாக இல்லாமல் அவன் முழுமையாகிப் போகிறான். 
நிச்சலனம் பெறுவாய். கட்டாயம் ஏதுமில்லாத நிச்சலனம் பெறுவாய். பயிற்சி செய்தோ, பழகிக் கொண்டோ பெறும் நிச்சலனம் அல்ல. இயல்பான நிச்சலனம் பெறுவாய். ஆசையின் பயனின்மை தெரிந்துக் கொண்ட நிச்சலனம். லட்சியங்களின் முட்டாள்தனத்தைக் தெரிந்துக் கொண்ட நிச்சலனம். அந்த நிச்சலனம் பெறுவாய். புரிதல் மூலமாக, பயிற்சியின் மூலமாக அல்ல. நிச்சலனம் பெறுவாய். 
உடைந்து கிடக்கும் காண்டாமணி போலச் சும்மாயிரு. மெளனித்திரு. எந்த முயற்சியும் இல்லாமல் விடுபட்டிருக்கும் நிச்சலனத்தைத் தெரிந்திரு. கடந்தவனாகிப் போகிறாய். கடந்ததே ஆகிப் போகிறாய். 
இதுதான் சந்நியாசத்தின் இலக்கு. ஆன்மிகத்தின் இலக்கு. ஆன்மிகத்தின் மைய ஈடு இதுதான். விஞ்ஞானம் பாதியைத் தெரிந்து வைத்திருக்கிறது. கலை இன்னும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறது. ஆன்மிகம் மட்டுமே முழுமையைத் தெரிந்து வைத்திருக்கிறது. 

        விஞ்ஞானம் வாழ்வை இரண்டு வகைகளாகப் பகுத்து வைத்திருக்கிறது. தெரிந்தது. தெரியாதது. ஆன்மிகம் மூன்று வகைகளைக் காண்கிறது. தெரிந்தது, தெரியாதது, தெரிந்து கொள்ள முடியாதது. தெரிந்து கொள்ள முடியாததிலிருந்துதான் அர்த்தம் பிறக்கிறது. இன்று தெரிந்திருப்பது நேற்று தெரியாததாக இருந்தது. இன்றைக்கு தெரியாதது நாளைக்குத் தெரிந்துவிடப் போகிறது. இரண்டுக்குமிடையே இயல்பளவில் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் காலத்தின் கோலம்தான். 
        தெரிந்து கொள்ள முடியாதது வித்தியாசமானது. இயல்பிலேயே வித்தியாசமானது. தெரிந்தது, தெரியாதது ஆகியவற்றிலிருந்து வித்தியாசமானது. தெரிந்து கொள்ள முடியாதது என்றால் அது ரகசியமாகவே இருக்கிறது. எவ்வளவுதான் ஆழப் போய்ப் பார்த்தாலும் அந்த ரகசியத்தை நீக்கிவிட முடியாது. மேலும் பார்க்கப் போனால் எந்த அளவுக்கு அதற்க்குள் ஆழப் போகிறாயோ அந்த அளவுக்குஅது மேலும் மேலும் ஆழமாகிக் கொண்டே போகும் அதிரகசியம். 

        காலை நேரத்து சூரியனால் ஆவியாகிப் போகும் பனித்துளியைப்போல, ஆன்மிகத் தேடல் கொண்டவன் ஒரு குறிப்பட்ட கணத்தில் இல்லாமல் போய்விடுகிறான். அதற்குள் மறைந்து போகிறான். ரகசியம் இருந்து கொண்டே இருக்கிறது. அதுதான் நிறைவேற்றத்தின் சிகரம். திருப்தியின் சிகரம். வீடடைந்து விடுகிறான். அதைக் கடவுள் என்று சொல்லிக் கொள். நிருவாணம் என்று சொல்லிக் கொள். என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். 

        களியாட்டங்கள் மனம் உனக்குத் தரும் கையூட்டு. ரேடியோவைப் பாட விடு, டிவியைப் போடு, சினிமாவுக்குப் போ, கிளப்புக்காவது போப்பா! வம்பு பேசு. எதையாவது செய்.