Saturday 11 January 2014

மனதை அனுபவி osho

மனதை அனுபவி

நான் எனது மனதுடன் சலித்து போய் விட்டேன். தியானம் செய்வதற்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்கும் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். ஆனால் அதை என்னால் உணரவே முடிய வில்லை.

முதல்படி – மனதை நிறுத்த முயற்சி செய்யாதே. சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய்தால் உனக்கு பைத்தியம்
பிடித்து விடும்.
ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்துக்கு
இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், நீ இதயப்பூர்வமான மனிதனாக மாற முயற்சி
செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில்
மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. உன்னை இதயபூர்வமான ஒருவனாக
கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது.
உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப்பதுதான் மத்தன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த
முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே.

இரண்டாவது படி – மனம் தனது வேலையை செய்வதை அனுபவி. மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு
முயலாதே.  அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையாட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள்.
மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது,  எப்படி ஒன்று ஒன்றுக்கு
அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது
ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த
இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார்.
ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை
வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வருகிறது. பின் நீ அங்கு இல்லை. நண்பன்
மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்……. நீ
எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய்
குரைப்பதில் ஆரம்பிக்கிறது. கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின்
சங்கிலியை பார்.
எளிதாக எடுத்துக் கொள், ஓய்வாக இரு. விழிப்புணர்வு உன்னுள் வரும், அது மறைமுகமாக வரும். விழிப்புடன் இருப்பது ஒரு
முயற்சி அல்ல. அதைத்தான் நீ செய்து கொண்டிருக்கிறாய். விழிப்புணர்வு அடைய முயற்சி
செய்து கொண்டிருக்கிறாய். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு
கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ
உணர்கிறாய். நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு
அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது
உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து
இருப்பீர்கள்.
எல்லா பிளவுகளும் தற்கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது. நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோஷத்துக்கு செலவிட
வேண்டும்.
சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும்
அன்பு சக்தியாக மாற வேண்டும். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற
ஆரம்பிக்கும்.

MY WAY: THE WAY OF THE WHITE CLOUDS - ஓஷோ


முயற்சியின்றி விழிப்புணர்வோடு இருத்தல் 

 
விழிப்புணர்வு கணத்துக்கு கணம்
இருக்க வேண்டும், ஆனால் அது அப்படி இருக்க வேண்டுமானால் அது முயற்சியின்றி
நடைபெறுவதாக இருக்கவேண்டும். முயற்சியோடு செய்யும்போது நீ திரும்ப திரும்ப தொடர்பை
விட்டு விடுவாய். முயற்சியோடு செய்யும்போது உனக்கு ஓய்வு தேவைப்படும். முயற்சி
தொடர்ந்து இருக்க முடியாது. அது சாத்தியமற்றது. ஒவ்வொரு முயற்சிக்கும் பின் ஓய்வு
தேவைப்படும். அதனால் விழிப்புணர்வு முயற்சியின் மூலம் வரும்போது விழிப்புணர்வு
தொடர்ச்சியானதாக, ஒரு தொடர் ஓட்டமாக இருக்கமுடியாது. நீ விழிப்புணர்வை தவற விடும்
கணங்கள் வரும். அவை முயற்சியின்றி ஓய்வாக இருக்கும் கணங்கள்.
வாழ்க்கை துடித்துக்
கொண்டேயிருக்கும், அது எப்போதும் எதிர்மறைக்கு சென்றுவரும். முயற்சி செய்தால் நீ
ஓய்வு எடுத்தே தீர வேண்டும். திரும்பவும் முயற்சி எடுப்பாய், பின் திரும்பவும்
ஓய்வு எடுப்பாய். ஆனால் வாழ்வை தாண்டி செல்லும் ஒரு விழிப்புணர்வு உண்டு. அது
கடந்து நிற்பது. அப்போது அங்கு அலைபாய்தல் இருக்காது. அது முயற்சியின்றி இருப்பது,
அது இயல்பானது. முயற்சி இருக்குமானால் அது வலுக்கட்டாயமானது, வலுக்கட்டாயமானது
எப்போதும் இயல்பானதாக இருக்காது. இயல்பற்ற விழிப்புணர்வு விழிப்புணர்வே அல்ல. அது
வெளிவட்டத்தில்தான் இருக்கும். உன்னுள் இருக்காது. அது உன்னுள் இருக்குமானால்
முயற்சி செய்ய தேவையே இல்லை. முயற்சி எப்போதும் வெளிவட்டத்தில் இருப்பது. முயற்சியின்
மூலம் மையத்தை தொட முடியாது.
ஆரம்பத்தில் முயற்சி தேவைதான்.
இல்லாவிடில் நீ எப்படி ஆரம்பிப்பாய், நீ முயற்சி செய்தே தீர வேண்டும், மனமற்று
இருக்க முயல்வாய், தன்னுணர்வோடு இருக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்வாய். ஆனால்
இந்த முயற்சி ஒருவித பதட்டத்தை உண்டாக்கும். எந்த அளவு முயற்சி செய்கிறாயோ அந்த
அளவு பதட்டம் உண்டாகும். சிறிய அளவிலான அனுபவகீற்றுகள் கிடைக்கும், ஆனால் இந்த
பதட்டத்தால் இந்த கணநேர அனுபவங்கள் கரைந்துவிடும். முயற்சி செய்தல் என்ற இந்த
கட்டத்தை நீ கடந்து வந்தாக வேண்டும்.
ஆனால் முயற்சி செய்யும்போது சில
சமயங்களில் திடீரென நாம் முயற்சி எதுவும் செய்யாமலே விழிப்புணர்வாக இருப்பது
உனக்கு தெரியவரும். அந்த சமயங்களில் இருக்கும் விழிப்புணர்வுதான் ஒளியாக, நிறைவாக,
மகிழ்வாக, நடனமாக இருக்கும்.
மூலம் – MY WAY: THE WAY OF
THE WHITE CLOUDS
இணங்கி இருக்கும் கலை
அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி
இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின்
இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன்
உண்மையாக தொடர்பு கொள்ள  முடியாது. அவரது
உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம்
எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது
எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும்
கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது,
அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.
மற்றொரு வகையிலும் இது
அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு
கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும் கலை என்பது
அதேதான். உன்னுடன் நீ தொடர்பு கொள்வதோ, அன்றி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதோ
ஒன்றேதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
இவை ஒரே நேரத்தில் சேர்ந்தே
கற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவற்றை பிரிக்க முடியாது. மக்களுடன் இரு.
தன்னுணர்வின்றி இருப்பது போல இருக்காதே. உணர்வுடன் இரு. புல்லாங்குழல் வாசிப்பது
போல, ஒரு பாடல் பாடுவது போல மக்களுடன் தொடர்பு கொள். ஒவ்வொருவரும் ஒரு இசைக் கருவி
போல. மரியாதை கொடு, அன்பு செய், அவர்களை ஆராதனை செய். ஏனெனில்
ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை ஒளிந்திருக்கிறது.
அதனால் மிகவும் கவனமாக இரு.
மிகவும் ஈடுபாட்டுடன் இரு. நீ சொல்வது என்ன என்பதில் கவனமாக இரு. நீ என்ன
செய்கிறாய் என்பதில் கவனமாக இரு. சிறிய விஷயங்கள் உறவை சிதைத்துவிடும். சிறிய
விஷயங்கள் உறவை மிகவும் அழகாக்கிவிடும். சில நேரங்களில் ஒரு புன்னகை கூட
அடுத்தவரின் இதயத்தை உனக்கு திறந்துவிடும். சில நேரங்களில் உன்னுடைய கண்களில்
இருக்கும் ஒரு தவறான பார்வை கூட அடுத்தவரின் இதயத்தை மூடி விடும். இதுதான் மிக
மென்மையான செயல்பாடு. இதை ஒரு கலை. ஒரு ஓவியன் வண்ணத்திரையில் எவ்வளவு கவனமாக
வரைவானோ அதைப் போலத்தான் இதுவும். ஒரு கோடு கூட வித்தியாசத்தை உண்டாக்கி விடும்.
ஒரு உண்மையான ஓவியனால் ஒரு சிறிய கோட்டின் மூலம் மிகப் பெரிய வித்தியாசத்தை கொண்டு
வர முடியும்.
வாழ்க்கையை மிகவும் கவனத்துடன்,
மிகவும் மென்மையாக நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் மற்றவர்களுடன் நாம்
தொடர்பு கொள்வது என்பது ஒரு கண்ணாடி போல. நீ என்ன செய்கிறாய், அதை எப்படி
செய்கிறாய், என்ன நிகழ்கிறது என்று பார். அடுத்தவர்களுக்கு என்ன நிகழ்கிறது, நீ
அவர்களது வாழ்க்கையை துயரமானதாக மாற்றுகிறாயா, நீ அவர்களுக்கு வலி கொடுக்கிறாயா,
நீ அவர்களுக்கு ஒரு நரகமாக மாறுகிறாயா, அப்படி என்றால் விலகிவிடு. உன் வழியை
மாற்றிக் கொள். உன்னைச் சுற்றி வாழ்க்கையை அழகாக்கு. உன்னை சந்திக்கும்
ஒவ்வொருவரும் அதை ஒரு பரிசாக உணர வேண்டும். உன்னுடன் இருப்பதாலேயே ஏதோ ஒன்று
பொங்கி பெருக வேண்டும், ஏதோ ஒன்று வளர வேண்டும், இதயத்துள் பாடல் மலர வேண்டும்,
மலர்கள் மலர வேண்டும். தனிமையில் இருக்கும்போது மௌனத்தில் இரு, நிசப்ததில் இரு,
உன்னை நீயே கவனி.
எப்படி பறவைக்கு இரண்டு சிறகுகள்
இருக்கிறதோ அது போல அன்பும் தியானமும் உனது இரண்டு சிறகுகள் ஆகட்டும். அவை
இரண்டிற்க்கும் ஒத்த லயத்தை உருவாக்கு. அப்போது அவை இரண்டும் ஒன்றுகொன்று
பிளவுபடாது, ஒன்றையொன்று வளப்படுத்தும், ஒன்றுகொன்று ஊட்டப்படுத்தும்,
ஒன்றுக்கொன்று உதவும். இதுதான் உன் பாதை. அன்பும் தியானமும் ஒருங்கிணைந்தது.
மூலம் – T HE RAINBOW BRIDGE
குறிக்கோள் இன்றி இருத்தல்
இங்கே இப்போது என இருப்பதற்கு
எனக்கு கடினமாக இருக்கிறது. நான் எப்போதும் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். என்ன செய்வது.
அதற்காக கவலைப்படாதே. என்ன
நிகழ்கிறதோ அதை அனுபவி. மேகத்தில் இருந்தால் அதை அனுபவி. எதற்காக அந்த கணத்தை நழுவ
விடுகிறாய், அதில் கரைந்து போ, அதில் முழ்கு. இங்கே இப்போது எப்படி இருப்பது
என்பதை ஒரு பிரச்னையாக மாற்றிக் கொள்ளாதே. அப்படி செய்தால் இதை நீ தவற விட்டு விடுவாய்.
எண்ணங்கள் இருந்தால் அவைதான் உனது நிகழ்காலம். நிகழ்காலத்தில் இருத்தல் என்பது
அடைவதற்கான ஒரு குறிக்கோள் அல்ல. அது ஒரு குறிக்கோளாக இருந்தால் அதை ஒருநாளும்
அடையவே முடியாது. நிகழ்காலம் என்பது இங்கே இருப்பது, குறிக்கோள் என்பது
எதிர்காலத்தில் இருப்பது.
அதனால் நீ எங்கே இருந்தாலும்,
என்ன செய்து கொண்டிருந்தாலும் அந்த செயலில் இரு.
நினைத்தால் நினைத்துக் கொண்டிரு,
கனவு கண்டு கொண்டிருந்தால் கனவு காணு. பிரிவினையை உண்டாக்கிக் கொள்ளாதே.
கனவிலிருந்து உன்னை தனியே பிரித்து, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், நான் நிகழ்காலத்தில்
இங்கே இப்போது இருக்க வேண்டுமே, கனவு கண்டு கொண்டிருக்கிறேனே, என யோசிக்காதே.
ஏனெனில் கனவு காணுதல்தான் உன்னுடைய இங்கே இப்போது. என்னுடைய இங்கே இப்போது
என்பதில் நீ இருக்க முடியாது. நீ உன்னுடைய இங்கே இப்போது என்பதில்தான்
இருக்கமுடியும். புரிகிறதா
கனவு காணுதல்தான் உன்னுடைய
நிதர்சனம். நீ வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உன்னுடைய நிகழ்காலத்திலிருந்து நீ
வெளியேறுகிறாய்.