Wednesday 17 July 2013

கீதை காட்டும் பாதை....ஆசை/அழிவு



நிலைத்த அறிவுடையவனைப் பற்றி விவரித்துக் கொண்டு வருகையில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படிக் கொண்டு வந்து விடுகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் மிக அழகாக விளக்குகிறார்.
"புலன்களுக்கான சாதனங்களையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு அவற்றில் பற்றுதல் எழுகின்றது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகின்றது; ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபத்தால் மன மயக்கம் ஏற்படுகிறது.  மனமயக்கத்தால் மறதி ஏற்படுகிறது. மறதியினால் புத்தி பாழாகிறது. புத்தி பாழானால் மனிதன் அடியோடு அழிகிறான்."
எல்லா ஆரம்பங்களும் எண்ணங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உயர்வுக்கும் அழிவுக்கும் உற்பத்தி ஸ்தானங்கள் எண்ணங்களே. புலன்கள் வழியே எண்ணங்களை ஓட விடும் போது அதற்கு அப்போது பெரியதொரு சக்தி இருப்பது போல் நாம் உணர்வதில்லை. எண்ணங்கள் அப்படியே புலன் வழிப் பொருள்களிலேயே தங்குமானால் அவற்றில் ஒரு கவர்ச்சி ஏற்படுவது இயற்கை. அவை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவற்றை அடைய ஆசை பிறக்கிறது. இந்த தருணத்தில் ஆசை மிகவும் பலம் பெற்று விடுகிறது.
விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம் அடைகிறான். தான் யார் என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது என்பதையும் மறக்கிறான். இந்த மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை, தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும் அபாயத்தை எச்சரிப்பதற்கும் மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின் மனிதன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான். 
எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது அபாயகரமானது. எண்ணம் எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம் தங்கத் தங்க அவை பலப்பட ஆரம்பிக்கின்றன. எண்ணங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லையானால் அவை செயல்களாக விளைகையில் நாம் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.
மலை மீதிருந்து உருட்டி விடப்பட்ட கல் எப்படி வேகமாகப் பயணித்து கீழே வந்து சேர்கிறதோ அப்படியே தான் புலன்களின் வழியில் சிந்தனைகளை ஓட விடுபவனும் கடைசியில் அழிவையே சந்திக்கிறான். கல்லை மலையில் இருந்து தள்ளி விட முனையும் முன் உங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம். தள்ளி விட்ட பின் கல்லைத் தடுக்க முயற்சிப்பது வீண். கல் தன் பயணத்தை முடித்தே நிற்கும். எனவே, கடுமையான விளைவுகளை விரும்பாதவர்கள் எல்லாவற்றையும் எண்ண நிலையிலேயே மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். அங்கு வரை தான் அதன் மீது கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கிறது.  
புத்தரும் தம்மபதத்தில் ஆசைகளே மனிதனின் துன்பங்களிற்குக் காரணம் என்று சொல்கிறார். ஆசைகள் இயல்பாகவே பூர்த்தியடையாத, திருப்தியடையாத தன்மையைக் கொண்டவை என்பதால் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்பவன் முடிவில் அது முடியாமல் துக்கத்தையே சந்திக்கிறான் என்று சொல்கிறார். மேலும் வீட்டில் விளக்குகள் எரியும் போது திருடர்கள் உள்ளே நுழையத் தயங்குவார்கள் என்றும், விளக்குகள் இல்லாத இருட்டு வேளையில் தான் உள்ளே நுழையத் துணிகிறார்கள் என்றும் உதாரணம் கூறுகிறார். இங்கு விழிப்பு உணர்வு தான் விளக்காக உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது. புலன்வழி பிறக்கும் ஆசைகள் இங்கு திருடர்களாக சித்திரிக்கப்படுகின்றன. வீட்டு எஜமானன் விழித்திருக்கையில் திருடர்கள் நுழைவதில்லை, அவன் விழிப்புணர்வுடன் இல்லை என்கிற போது தான் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.
விழிப்பு உணர்வு என்பது நிலைத்த அறிவுடையவனுக்கு தான் தொடர்ச்சியாக இருக்க முடியும். அப்படிப்பட்டவன் புலன்வழியாக எண்ணங்கள் பயணிக்க ஆரம்பிக்கும் முதல் கணத்திலேயே அதை உணர்ந்து அந்த எண்ணங்கள் பலப்படும் முன்னர் அவற்றை அழித்து விடுகின்றான். களைகளை முளை விடுகையிலேயே பிடுங்குவது சுலபம். அவை வேர்விட்டு பலமடைந்த பின்னர் பிடுங்குவது மிகவும் கஷ்டம். அது போலத் தான் எண்ணங்கள் தோன்றுகையிலேயே அவற்றின் போக்கறிந்து அழித்து விடுவது சக்தி விரையத்தையும் நேர விரையத்தையும் தவிர்க்கிறது.
ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார். "புலன்கள் அலைந்து திரிகையில் மனமும் பின் தொடர்ந்து சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல அவனது அறிவை மனம் அடித்துச் சென்று விடுகிறது." இது மிக அழகான உதாரணம். புயல்காற்றில் சிக்கிய படகு எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு படாதபாடு படுகிறதோ அது போல ஆசைவழி சென்ற பகுத்தறிவுள்ள மனிதனும் மனதை அடக்கியாள முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறான்.
கிட்டத்தட்ட இதே உதாரணத்தை தாமஸ் ஏ.கெம்பிஸ் என்ற அறிஞரும் கூறுகின்றார். "சுக்கானில்லாத கப்பலை அலைகள் அங்குமிங்கும் இழுத்துச் செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக் கைவிட்ட மனிதனை ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன"
இந்த படகு, கப்பல் உதாரணங்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. நம்மை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுபவை படகும், கப்பலும். அந்தப் பயணத்தை நம் வாழ்க்கைப் பயணம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் அந்த வாழ்க்கைப் பயணத்திற்கு நமக்குக் குறிப்பிட்ட காலமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். அப்படி இருக்கையில் ஆசைகளை நம்மை ஆட்சி செய்ய விட்டால் நம் பயணத்தின் வழி மாறி அங்குமிங்கும் நாம் அலைக்கழிய நேரிடும். 'ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே' என்று கவிஞர் பாடியது போல நம் வாழ்க்கை நம் ஆரம்ப எண்ணப்படி இலக்கு நோக்கி செல்லாமல் சம்பந்தமில்லாத வழிகளில் அடித்து செல்லப்பட்டு விடும்.
மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு முயன்றால் கூட தடம் புரள ஆரம்பித்த அந்த இடத்திற்கு வந்து சேர்வது கூட சில சமயங்களில் முடியாத காரியமாகி விடும்.
சுவாமி சச்சிதானந்தா இதற்கு வேறொரு அருமையான உதாரணத்தைக் கூறுகிறார். "மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை.
அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்".
ஆசைகள் வழி செல்கின்ற பயணத்தில் என்றுமே கட்டுப்பாடு நம் வசம் இருக்க முடியாது. இதோ சிறிது தூரம் தான், இதோ இது மாத்திரம் தான் என்று மனம் ஆசைகள் வாய்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல முடிவில் புயலில் சிக்கிய படகாக அலைக்கழிக்கப்படுகிறது. இந்த அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்க ஆசையை உதறி விடுவது தான் ஒரே வழி. புலன்வழிச் சிந்தனைகள் ஆசை காட்டும் போது, தூண்டிலை வீசும் போது, சிக்கிக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதன் மூலமாகவே ஒருவன் துக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். எனவே தான் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆசைகளையும் தவிர்த்தவன் அறிவே நிலையானது என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகக் கூறுகிறார்.
சிலசமயங்களில் ஒரு ஆசையே ஒருவனது துக்கத்துக்கும், அழிவுக்கும் மூலகாரணமாகி விடுவதுண்டு. தங்கம் போல் தகதகவென்று மின்னிய மாயப் பொன்மானைக் கண்டு ஆசைப்பட்ட சீதை அந்த ஒரு ஆசையின் காரணமாகவே தன் பிற்கால வாழ்வு முழுவதும் துக்கத்தில் ஆழ நேரிட்டது. சீதையின் மேல் வைத்த ஒரு ஆசை ராவணனின் எல்லா வலிமைகளையும் போக்கி அவன் அழியக் காரணமாகி விட்டது.
மேலும் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுபவித்து திருப்தி அடைந்து, இனி போதும் என்று நிறைவடைவது நடக்காத காரியம். இந்த உலக இன்பங்களை பல்லாண்டுகள் சுகித்து, மூப்படைந்தவுடன் ஒரு மகனுடைய  இளமையையும் இரவல் வாங்கி மேலும் பல காலம் சுகங்களை அனுபவித்தும் நிறைவு பெறாமல், இந்த ஆசைப் பயணத்திற்கு எல்லை இல்லை என்பதை இறுதியில் உணர்ந்தான் பாண்டவர்களின் மூதாதையருள் ஒருவனான யயாதி.
எனவே தான் நம் முன்னோர்கள் உலகையே வென்றவனை விட, ஆசைகளை வென்றவனை உயர்வாக நினைத்தார்கள். உலகை வெல்லத் தேவைப்படும் சக்தியை விட அதிகமாய் ஆசைகளை வெல்ல வலிமை வேண்டும் என்று அவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தார்கள். அலெக்சாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டு இந்த தேசத்து எல்லைக்கு வந்த போது அங்கிருந்த துறவிகளிடம் காணப்பட்ட தேஜசையும், அமைதியையும், சாந்தியையும் கண்டு பிரமித்தான் என்று சொல்லப்படுகிறது.
கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற சிறு நாட்டின் மன்னனான அவன் அங்கிருந்து இமயம் வரை கடந்து வந்த இடங்களையெல்லாம் வென்ற மாவீரன். அவன் வாழ்நாள் நீடித்திருந்தால் உலகையே வென்றிருப்பான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அத்தனை நாடுகளை வென்று குவித்தும் அவனால் பெற முடியாத நிறைவான அமைதியை, ஆசைகளை வென்றிருந்த அந்த துறவிகளிடம் கண்ட போது அரிஸ்டாடிலின் மாணவனான அவனுக்கு உண்மையான வெற்றி எது என்று புரிந்திருக்கும். இந்த உண்மையான வெற்றியை ஸ்ரீகிருஷ்ணர் வர்ணிக்கும் நிலைத்த அறிவுடையவனாலேயே பெற முடியும்.

No comments:

Post a Comment