Saturday 28 November 2015

இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையா? நிஜத்தை தோலுரிக்கும் முஸ்லிம் பெண்ணின் நெகிழ்ச்சி மடல்

பெங்களூர்: இந்தியாவை போன்ற சுதந்திரம் வேறு எந்த ஒரு நாட்டிலுமே இல்லை.. 'எனது இந்தியாவை' சகிப்புத்தன்மையற்ற நாடு என்று கூறும் சுதந்திரத்தை அமீர்கானுக்கு கொடுத்தது யார்? தயவு செய்து இந்துக்களின் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் சோதிக்காதீர்கள் என்று இஸ்லாமிய பெண் டாக்டர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து, இந்தியாவின் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது., இணைய உலகில் இன்றைய பரபரப்பு கருத்தாக அந்த பெண்மணியின் கருத்து மாறிப்போயுள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என 12 மத பண்டிகைகள் இணக்கமாக கொண்டாடப்படும் நாடு இந்தியா. தீபாவளி பலகாரம், அப்துல்லா வீட்டிலும், ரம்ஜான் பிரியாணி, ராமராஜன் வீட்டிலும் சாப்பிடப்படும் நாடு இந்தியா. ஆனால், ஒரு சிலரின் கருத்துக்கள் இன்றைய ஊடக வெளிச்சத்தில், தேசத்தின் முகம்போல மாற்றப்படுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் பிரபலங்களும் கருத்தை கூறும்போது, எரியும் நெருப்புக்கு நெய் வார்க்கப்படுகிறது. பெங்களூரில் வசிக்கும், சோஃபியா ரங்கவாலா என்ற அந்த இஸ்லாமிய பெண் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதன் தமிழாக்கம் இதோ: நான் ஒரு முஸ்லிம் பெண். டெர்மடாலஜி படித்த நான் பெங்களூரில் ஸ்கின் கிளீனிக் நடத்தி வருகிறேன். 18 வயது வரை நான் குவைத்தில்தான் வளர்ந்தேன். மெடிக்கல் கல்விக்காகவே இந்தியா வந்தேன். இதன்பிறகு நான் குவைத் திரும்பவில்லை, இந்தியாவிலேயே 20 வருடங்களாக வாழ்கிறேன். கர்நாடகாவிலுள்ள மணிப்பால் நகரில்தான் நான் மருத்துவ கல்வி பயின்றேன். கல்லூரியில் எனது பேராசிரியர்கள் அனைவருமே இந்து மதத்தை சேர்ந்தவர்கள். நான் பழக நேரிட்ட பெரும்பாலான மக்கள் இந்துக்கள். ஆனால், எனது மதத்தை வைத்தோ, எனது பாலினத்தை வைத்தோ, வித்தியாசமாக என்னை நடத்திய ஒரு சம்பவம் கூட நடந்ததே கிடையாது. நான் பழகிய ஒவ்வொரு இந்துக்களும், மிகவும், பாசமாக நடந்துகொண்டனர். சொல்லப்போனால், நான் என்னை வித்தியாசமாக உணர்ந்துவிட கூடாது, தங்களில் ஒருவளாக நினைக்க வேண்டும் என்பதற்காக எனக்கு மட்டுமே சிறப்பு கவனம் செலுத்தி பாசம் காட்டினர். அவர்கள் அனைவருக்குமே நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். மணிப்பாலில் கல்வி முடித்த பிறகு, பெங்களூரில் எனது கணவரோடு செட்டில் ஆனேன். முஸ்லிமான எனது கணவரது பெயர் இக்பால் என தொடங்கும். எனவே எளிதில் அவர் முஸ்லிம் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். சென்னை ஐஐடியில் எம்டெக் படித்த கணவர், பிறகு ஜெர்மனியில் பிஹெச்டி முடித்தார். அவரது தொழில் நிமித்தமாக இந்தியாவின் மிகமுக்கியமான பாதுகாப்பு துறை சார்ந்த பாதுகாப்பு மற்றும் ஆய்வு அமைப்பு (டிஆர்டிஓ), என்.ஏ.எல்., ஹெச்.ஏ.எல், ஜிடிஆர்இ, இஸ்ரோ, ஐஐஎஸ்சி, பெல் போன்ற நிறுவனங்களுக்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் எந்த ஒரு பாதுகாப்பு அமைப்புக்குள் போகும்போதும், இவருக்கு தனிப்பட்ட சோதனைகள் கிடையாது. ஒருமுறைகூட இவரை தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியதில்லை. சக இந்து ஊழியர்களுக்கு என்ன சோதனையோ அதுவேதான் எனது கணவர் இக்பாலுக்கும். மோடி அரசு பதவிக்கு வந்தபிறகும், இக்பால் அதே சுதந்திரத்தை அனுபவித்துதான் வருகிறார். மோடி அரசு வந்த பிறகு அரசு துறைகளில் பணி இன்னும் சிறப்பாக நடைபெறுவதாகத்தான் இக்பால் என்னிடம் கூறியுள்ளாரே தவிர, வேறுபாடு உயர்ந்ததாக கூறவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு முறை அமெரிக்கா செல்ல வேண்டி வரும்போதும், இக்பால் ஆடை அவிழ்த்து சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். ஜெர்மனியில் பிஹெச்டி படித்தபோது, அவர் ரகசியமாக உளவு பார்க்கப்பட்டு வந்தார். குறிப்பிட்ட நாட்கள் உளவு பார்த்த ஜெர்மன், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், இனிமேல் உங்களை உளவு பார்க்க மாட்டோம். பாதுகாப்பு சோதனைகளை தாண்டிவிட்டீர்கள் என்று கூறியிருந்தது. எனது கணவர் தனது பணியிடத்தில் எல்லோராலும் அன்புடன் பார்க்கப்படுகிறார். அதில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான். சமீப காலத்தில் கூட இந்த பாசத்தில் எந்த மாற்றத்தையும் அவர் பார்க்கவில்லை. சகிப்புத்தன்மை இல்லை என்பது வெறும் வார்த்தையே தவிர, யதார்த்தம் அது கிடையாது. எனது கிளீனிக்கிற்கு வரும் பெரும்பாலான மக்கள் இந்துக்கள். எனது அனைத்து ஊழியர்களும் இந்துக்களே. நான் வங்கி தொழில் செய்வோர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களோடு தினமும் பழகும் வாய்ப்பை பெற்றுள்ளேன். கடந்த 20 வருடங்களில் ஒருமுறை கூட நான் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கவில்லை. எனது குடும்பம் முழுக்க வெளிநாட்டில்தான் உள்ளது. நானும் அங்கு செல்வது எளிதானது. குவைத்தில் கிளீனிக் திறக்க எனக்கு வாய்ப்புகள் வருகின்றன. அங்கு வருமானமும் அதிகமாக கிடைக்கும். இருப்பினும் நான் இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன். குவைத்தில் நாங்கள் யாரோ ஒருவர் போலத்தான் பார்க்கப்படுகிறோம். 40 வருடங்களாக எனது பெற்றோர் உள்ளிட்ட குடும்பம் குவைத்தில் இருந்தபோதிலும், எந்த ஒரு உரிமையும் எங்கள் குடும்பத்திற்கு கிடையாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் குடியிருப்பு அனுமதியை கூட புதுப்பித்துக் கொள்ளும் நிலைதான் அங்கு உள்ளது. சட்டம் அங்கு தொடர்ந்து மாற்றப்பட்டுக் கொண்டே உள்ளது. வாழ்க்கை நடத்துவது கொஞ்சம் கடினமான காரியமாகவே உள்ளது. சட்டம், விதிமுறையை கடுமையாக பின்பற்றியே ஆக வேண்டும். அதை ஏற்கிறேன். ஆனால், வெளிப்படையாகவே, ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைதான் தாங்க முடியவில்லை. ஆசியாவை சேர்ந்தவர்களை மூன்றாம்தர குடிமக்கள் போலவே பார்க்கிறார்கள். அரபுக்களையும், வெள்ளை இனத்தவர்களையுமே அவர்கள் முதல்தர குடிமக்களாக நடத்துகிறார்கள். நாங்கள் அங்கு மகிழ்ச்சியில்லாமல் உள்ளோம் என்று கூறமாட்டேன். ஆனால் அந்த நாடு எங்களுடையது என்ற எண்ணம் வரவில்லை. நாங்கள் முஸ்லிம்களாக முஸ்லிம் நாட்டிலேயே இருந்தபோதிலும், எங்களை இந்தியர்கள் என்றுதான் குவைத் கருதுகிறது. அமெரிக்காவில் இருந்தால், அமெரிக்க இந்தியர் என அழைக்கப்படுகிறார், கனடாவில் வசித்தால், கனடிய இந்தியர் என அழைக்கப்படுகிறார், இங்கிலாந்து எனில், பிரிட்டீஷ் இந்தியன் என்று அழைக்கப்படுகிறார்கள், ஆனால், இந்தியாவில் மட்டுமே நீங்கள் இந்தியர்கள். இந்த இந்திய நாட்டில்தான், இது நமக்கான நாடு என்ற எண்ணம் எனக்குள் எழுகிறது. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கும், அவர்களுக்கு இந்த நாட்டில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கூறும் உண்மையை மறுக்க முடியாது. உங்கள் வீட்டில் மட்டுமே நீங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். நான் பல பகுதிகளில் வசித்துள்ளேன். ஆனால், இந்தியாவில், யாருமே என்னை பார்த்து, 'நீங்கள் இந்தியரா?' என்ற கேள்வியை கேட்டதில்லை. இதுதான் பிற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம். ஒரு சாமானிய குடிமக்களான எனது கணவரும், நானுமே எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. ஆனால், திரையுலகின் ஸ்டார்களுக்கு என்ன பிரச்சினை வந்தது? ஏன் அமீர்கானும், அவரது மனைவி கிரண் ராவும், பயப்பட வேண்டும்? அவர்கள் பிரபலமானவர்கள். செல்வசெழிப்பான ஏரியாவில் வசித்து வருகிறார்கள், அவர்கள் குழந்தைகள், பெஸ்ட் பள்ளிகளில் படிக்கிறார்கள், எப்போதுமே, பாதுகாவலர்கள் அவர்களை சூழ்ந்து நிற்கிறார்கள். தனியாக எங்கு வேண்டுமானாலும் நடந்து செல்லும் நானே பயப்படவில்லையே. இவர்கள் ஏன் பயப்பட வேண்டும்? ஒரு பொறுப்புள்ள குடிமகளாக நான், அமீர்கானையும், ஷாருக்கானையும் கேட்க விரும்புவது, "ஏன் உங்கள் பொறுப்பற்ற வார்த்தைகளால், இந்தியாவிலுள்ள 13 கோடி முஸ்லிம்களின் மதிப்பை கெடுக்கிறீர்கள்? உங்கள் சொந்த யூகத்தை வைத்துக்கொண்டு, பொது இடத்தில் இதை கூற உங்களை எது தூண்டியது? பாகிஸ்தான் எப்படி அவர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு கூறலாம்?". எனது இந்து நண்பர்கள் இப்போது, முஸ்லிம்கள் குறித்து கூறும் கருத்துக்களால் நான் வேதனையடைந்துள்ளேன். இந்துக்கள் தங்களது பொறுமையின் எல்லைக்கே தள்ளப்பட்டுவிடுவார்களோ என்று நான் அச்சப்படுகிறேன். இத்தனை நாட்களாக நான் அனுபவித்து வந்த சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை இந்துக்கள் இனி தூக்கி எறிந்துவிடுவார்களோ என்று அச்சப்படுகிறேன். சில முட்டாள் கூட்டத்தின் காரணமாக, எனது சொந்த மக்களே, என்னை வெறுத்துவிடுவார்களோ, என்னை தனிமைப்படுத்திவிடுவார்களோ என பயப்படுகிறேன். இந்த முட்டாள்த்தனத்தை, பெரும்பான்மையான இந்துக்கள் இன்னும் எத்தனை காலம்தான் தாங்கிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? இந்தியாவில் நாம் அனுபவித்து வரும் சுதந்திரத்தையும், சகிப்புத்தன்மையையும், முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தருணம் இது. அப்படி புரிந்துகொள்ளாவிட்டால், எனது சக இந்து குடிமக்களே, நீங்கள் உங்கள் பொறுமையை விட்டுவிடாதீர்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். இப்படி முடிகிறது அந்த பெண்ணின் கருத்து