Tuesday 3 May 2016

மனதை உபயோகிக்காமல் பார்த்தல்


நீ பொருட்களை எப்படி பார்க்கிறாய் என்பது உன்னைப் பொருத்தது, பொருட்களை பொருத்ததல்ல. இடைச்செருகல் செய்யும் மனதை விட்டு விட்டு நேரடியாக தனித்து பொருட்களை பார்க்கும் ஒரு நிலைக்கு வரும் வரை மனம் உன்னை மொழிபெயர்த்துக் கொண்டேதான் இருக்கும். அது நிறத்தை மாற்றும், அது பல விஷயங்களை கலந்து இடையூறு செய்யும். அவை தூய்மையானதாக இராது.

அதனால் உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. – எப்படி நீ உனது பார்வையாக மாறுவது, மனதின் துணையை எப்படி கைவிடுவது என கற்றுக் கொள்வதுதான். இந்த மனதின் கொந்தளிப்புதான் பிரச்னை. ஏனெனில் மனத்தினால் கனவுகளை மட்டும்தான் உருவாக்க முடியும். ஆனால் மனதால் மிக அழகான கனவுகளை உருவாக்க முடியும். அதனால் நீ மிகவும் கிளர்ச்சியுறுகிறாய். இந்த கிளர்ச்சியினால் அந்த கனவு உண்மை போல தோன்றுகிறது. நீ மிகவும் அதீத கிளர்ச்சியுறும்போது போதையடைந்து விடுகிறாய். நீ உணர்வோடு இல்லை. அப்போது நீ பார்ப்பது எதுவும் நீ பார்ப்பதல்ல. மேலும் எத்தனை மனம் உண்டோ அத்தனை உலகம் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு மனமும் அதன் சொந்த உலகில் வாழ்கிறது. நீ அடுத்தவரின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கலாம், ஆனால் நீ உன்னுடைய முட்டாள்தனத்தை பார்த்தே சிரிக்காத வரை நீ இயல்பானவனாகவோ, உண்மையானவனாகவோ, தாவோவின் வழி செல்பவனாகவோ ஆக முடியாது. என்ன செய்வது ?

மனதை கொண்டு வராமல் இருந்து பார்க்க முதலில் சிறிய விஷயங்களில் முயற்சி செய். ஒரு மலரை பார்க்கும் போது வெறுமனே பார். அழகு என்றோ அசிங்கம் என்றோ சொல்லாதே. வார்த்தைகளை கொண்டு வராதே. சொற்படுத்தாதே. வெறுமனே பார். மனம் மிகவும் சங்கடப்படும், அசௌகரியப்படும். ஏதாவது சொல்ல முற்படும். ‘அமைதியாக இரு, நான் பார்க்கிறேன், என்னை பார்க்க விடு’ என்று சொல்லி விடு.
முதலில் இது கடினமானதாக இருக்கும். ஆனால் உனக்கு அதிக ஈடுபாடு இல்லாத விஷயங்களில் இருந்து இதை ஆரம்பி. வார்த்தைகள் எதையும் உள்ளே கொண்டு வராமல் உனது மனைவியை பார்ப்பது கடினம். நீ உணர்வுரீதியாக இணைந்திருக்கிறாய், ஈடுபாடு கொண்டிருக்கிறாய். அன்போ, கோபமோ ஆனால் ஈடுபட்டிருக்கிறாய். நடுநிலையான விஷயங்களில் இருந்து ஆரம்பி, பின்தான் உணர்வுரீதியாக கட்டுண்டுள்ள சூழ்நிலைகளை கையாள முடியும்.

எப்போது என்னால் விஷயங்களை மனமின்றி பார்க்கமுடியும் என்று உனக்கு தோன்றுகிறதோ அதன்பின் சொந்த பிடிப்புக்கள் மீது முயற்ச்சித்துப் பார். மெது மெதுவாக அதில் திறமை வந்துவிடும். நீ மனதோடு அதிக நாட்கள் இருந்துள்ளதால் மனமின்றி ஒரு கணம் கூட இருக்க முடியாது என்றே உனக்குத் தோன்றும். மனமின்றி இருக்க முடியும் என்பதை உன்னால் நம்ப முடியாது. ஆனால் முயற்சித்துப் பார். எந்த அளவு மனதை தள்ளி வைக்கிறாயோ அந்த அளவு வெளிச்சம் உனக்குத் தெரியும். ஏனெனில் அப்போது அங்கே கனவுகள் இல்லை, எனவே கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது, ஆகாயம் உனக்கு தெரிகிறது, சூரியன் எழுகிறது, அது வந்து உன் இதயத்தை தொடுகிறது, ஒளி உன்னை வந்தடைகிறது. உனக்குள் கனவுகள் குறைய குறைய நீ சத்யத்தால் மேலும் மேலும் நிரப்பப்படுவாய்.

No comments:

Post a Comment