Monday 5 August 2013

அறிவாளி Vs புத்திசாலி.....Osho

          
                                        அறிவாற்றல் போலித்தனமானது, பொய்யானது. அது புத்திசாலித்தனத்திற்கு மாற்றானது. புத்திசாலித்தனம் என்பது முற்றிலும் வேறுபட்டது, அது உண்மையான ஒன்று.
 
        புத்திசாலித்தனத்திற்கு அளவற்ற தைரியம் வேண்டும். ஒரு சாகசமான வாழ்வுதான் புத்திசாலித்தனத்தை தர முடியும். புத்திசாலித்தனத்திற்கு எப்போதும் அறியாதது வேண்டும், ஒரு தெரிந்திராத புலம் வேண்டும். அப்போதுதான் புத்திசாலித்தனம் வளரும். அது கூர்மையடையும். அது ஒவ்வொரு கணமும் அறியாத ஒன்றை எதிர் கொள்ளும் போதுதான் வளரும்.
மக்கள் அறியாததைக் கண்டு பயப்படுகிறார்கள். மக்கள் அறியாதது எனும்போது பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். அவர்கள் தெரிந்ததை கடந்து போக விரும்புவதேயில்லை. அதனால்தான் அவர்கள் புத்திசாலித்தனத்திற்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் மாற்று ஒன்றை உருவாக்கினர். அதை அறிவாற்றல் என்றழைத்தனர்.

அறிவாற்றல் வெறும் மூளையின் விளையாட்டு. அது படைக்கக் கூடியதல்ல.
அறிவாற்றல் கற்பனை செய்யும், ஆனால் அது உருவாக்காது. புத்திசாலித்தனம் உருவாக்கும். புத்திசாலித்தனம் உன்னை பிரபஞ்சத்துடன் பங்கு கொள்ள வைக்கும் ஆற்றல் படைத்தது, ஆகவே அது படைக்கும். பிரபஞ்சம்தான் எல்லா படைப்புக்களின் ஆதாரம். நீ பிரபஞ்சத்துடன் இணைந்து இருக்கும்போதுதான். நீ இயற்கையில் வேர் கொண்டு இருக்கும்போதுதான், நீ இறைமையின் ஒரு பாகமாக இருக்கும்போதுதான் உன்னால் உருவாக்க முடியும். நீயாக எதையும் உருவாக்க முடியாது, நீ இயற்கையின் ஒரு ஊடகமாக மாறும்போதுதான் உன்னால் உருவாக்க முடியும்.

ஒரு கவிஞன் கவிதை இயற்றும்போது அவன் ஒரு வெற்று மூங்கிலாகிறான், அவன் ஊடகமாகிறான். அப்போது திடீரென அந்த வெற்று மூங்கில் மூங்கிலல்ல, அது புல்லாங்குழலாகிறது. மூங்கிலின் காலி இடம் முழுமையும் பாடலாக, ஆடலாக, கொண்டாட்டமாக மாறுகிறது.

படைப்புத்தன்மை என்பது நீ மறைவதுதான். நீ தூர விலகி நின்று பிரபஞ்சம் உன்னை எடுத்துக் கொள்ள அனுமதிப்பதுதான்.

அறிவாற்றல் ஆணவத்தன்மை உடையது. புத்திசாலித்தனம் பணிவானது, ஆணவமற்றது. இந்த வித்தியாசம் மிகவும் மெலிதானது, ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரே மூலத்திலிருந்துதான் வந்தவை. எனவே ஏமாறுவது எளிது. கவனமாக இரு, ஜாக்கிரதையாக இரு. அறிவாற்றல் புத்திசாலித்தனமல்ல. புத்திசாலித்தனம் படைப்பாற்றல் கொண்டது. அறிவாற்றல் நடிப்பது. படைப்பது எனும் பெயரில் அது குப்பைகளை உருவாக்கும்.

புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுபட்டது. அது தலையுடன் தொடர்புடையதல்ல. அது இதயத்துடன் தொடர்புடையது. அறிவாற்றல் மூளையில் இருப்பது. இதயம் முழுமையாக திறந்திருக்கும் நிலைதான் புத்திசாலித்தனமாகும். உனது இதயம் திறந்திருக்கும்போது, ஆழமான நன்றியுணர்வில் நடனமாடிக்கொண்டிருக்கும்போது, உனது இதயம் பிரபஞ்சத்துடன் லயத்தில் இருக்கும்போது, இயற்கையுடன் இணைந்து
இருக்கும்போது அந்த லயத்தில் இருந்து படைப்பு எழுகிறது.

அறிவாற்றலிலிருந்து எந்த விதமான படைப்பும் எழ வாய்ப்பே இல்லை. அறிவாற்றல் குப்பைகளைத்தான் உருவாக்கும். அது உற்பத்தி செய்யும், அதனால் உற்பத்தி செய்ய முடியும், ஆனால் படைக்க முடியாது. படைப்பதற்க்கும், உற்பத்தி செய்வதற்க்கும் என்ன வித்தியாசம் உற்பத்தி செய்வது இயந்திரத்தனமான செயல். கம்ப்யூட்டர்களே அதை
செய்யும். அதை ஏற்கனவே செய்து கொண்டும் இருக்கின்றன. மனிதர்களை விட மிகவும் நன்றாகவே செய்து கொண்டு இருக்கின்றன.

புத்திசாலித்தனம் படைக்கும் , ஆனால் அது உற்பத்தி செய்யாது. உற்பத்தி என்றால் ஏற்கனவே செய்த ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வது. படைப்பது என்பது புதிய ஒன்றை இருப்பினுள் கொண்டு வருவது, அறியாத ஒன்றை நடப்பில் கொண்டு வரும் முயற்சி, வானம் பூமிக்கு வர ஒரு வழி உண்டாக்குவது,

அறிவாளி, தகவலறிவுடையவன், அதில் தேர்ச்சி பெற்றவன் தன்னிடம் எந்த உள்ளொளியும் இல்லாதவன். அவன் பாரம்பரியத்தை, தகவலறிவை, பரிமாற்றத்தை சார்ந்து இருப்பான். அது ஒரு சில இடங்களில் பொருந்தி இருக்கும், ஆனால் அது சுயஉணர்வற்றது, நீ கிட்டத்தட்ட தூக்கத்தில் செயல்படுபவாய்.

புத்திசாலித்தனம் விழிப்புடையது, நீ முழுமையாக விழிப்புடன் இல்லையென்றால் நீ தீர்மானிப்பது எதுவாக இருந்தாலும் எங்காவது தவறாக முடியக்கூடிய வாய்ப்புண்டு.

செயலில் நீ புத்திசாலித்தனமாக இருக்க உனக்கு அதிக தகவல் தேவை இல்லை. அதிக தியானத்தன்மைதான் தேவை. மௌனமாக, அமைதியாக எண்ணங்களற்று இருப்பதுதான் தேவை. நீ மேன்மேலும் அதிக இதயபூர்வமாகவும் குறைவான அளவு மனதோடும் செயல்படுபவனாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment