Wednesday 20 November 2013

சோழர்கள் கட்டிய அற்புத கோயில்கள்!

 

சோழர்காலக் கட்டிடக்கலை என்பதை பல்லவர்கள் துவக்கி வைத்த பாணியின் தொடர்ச்சியாகவே வரலாற்று ஆய்வாளர்களும், கட்டிடக்கலை நிபுணர்களும் கருதுகிறார்கள்.
விஜயாலயன், முத்தரையர்களை வென்று சோழர்கள் ஆட்சியை தமிழகத்தில் நிறுவிய காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டத்துவங்கி விட்டனர்.
ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் ஏனோ பெரியவையாக அமையவில்லை. எனினும் இராஜராஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற அளவிற் பெரிய கோயில்கள் தோன்ற ஆரம்பித்தன.
இவற்றில் கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு மகுடம் வைப்பது போன்ற உன்னத படைப்பாகும்.
இந்த கலைக் கோயிலை போன்று தமிழ்நாட்டில் சோழர்களால் எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில கோயில்களை பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம்

கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்

நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னங்களில் தில்லை நடராஜர் கோயிலுக்கு எப்போதும் தனி இடமுண்டு. இந்தக் கோயிலின் கோயிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு கட்டப்பட்டதாகும். ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது. இதன் மூலம் ‘பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்

சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் வளாகம், சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 24 சந்நிதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்கோயில் குலோத்துங்கச் சோழரின் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கோயிலின் குளம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில் குளங்களுள் ஒன்றாகும்.

ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு

தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு உள்ள சுவரோவியங்கள் சோழ சாம்ராஜ்யம் மற்றும் விஜயநகர மன்னர்களின் முக்கிய வரலாற்று தகவல்களை அறிந்துகொள்ளும் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்

சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது. மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது.

ஜம்புலிங்கேஸ்வர் கோயில், திருவானைக்காவல்

திருவானைக்காவலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வர் கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழ மன்னரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதோடு சோழர்கள் காலத்தில் எழுதப்பட்ட சில கல்வெட்டுகள் கோவில் சுவர்களில் இன்றும் காணப்படுகின்றன. இக்கோவில் கட்டப்பட்டு 1,800 ஆண்டுகள் ஆனபோதிலும் பராமரிப்பு பணியினால் இன்றும் நல்ல நிலையில் காணப்படுகிறது. ஜம்புகேஸ்வர் கருவறை அடியில் ஒரு நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் இந்த ஊற்று நீர் ஆதாரத்தை காலி செய்ய முயன்றாலும் அது மறுபடியும்

சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
நிரம்பி விடுகிறது!

No comments:

Post a Comment