Tuesday, 4 February 2025

கடவுளிடம் பிரார்த்தனை செய்வது எப்படி? - OSHO

 கடவுளிடம் பிரார்த்தனை செய்வது எப்படி?


ஒருவன் கடவுளிடம் எதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்? கடவுளுக்கு உங்கள் பிரார்த்தனை தேவையில்லை. உங்கள் பிரார்த்தனைகள் வழக்கமாக உங்கள் ஆசைகளின் வெளிப்பாடாகவும், உங்கள் வேண்டுகோளாகவும், உங்களுடைய புகார்களை வெளிப்படுத்தக் கூடியதாகவும் தானே இருக்கும்.

பிரார்த்தனை என்ற பெயரில் மக்கள் இதைத்தானே செய்து கொண்டு இருக்கிறார்கள். புகார் சொல்வது, புகார் சொல்வது, புகார் சொல்லிக் கொண்டே இருப்பது. பிறகு "இப்படியெல்லாம் நடக்கக் கூடாது" என்று கடவுளுக்கே புத்தி சொல்லும் வகையில் புலம்பத் தொடங்கி விடுகிறீர்கள்.

அது மட்டுமல்லாமல் கடவுளைப் பற்றிய எந்த ஒரு அம்சமும் உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு தெரியாத ஒன்றிடம் உங்களால் எப்படி பிரார்த்திக்க முடியும்,  ஒரு தெரியாத கடவுளை உங்களால் எப்படி நேசிக்க முடியும்? உங்கள் பிரார்த்தனை என்பது வெறுமனே ஒரு சம்பிரதாயமாகத் தான் இருக்கும்.

கடவுள் இப்பொழுது முக்கியம் இல்லை. முதலில் உங்களுக்கு தேவை தியானம் மட்டுமே.

தியானம் என்பது முற்றிலும் வேறான ஒரு பரிமாணம். கடவுளுக்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை, அது முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தது. உங்கள் மனதைச் சார்ந்தது. அது உங்களுள் ஒரு அமைதியை உருவாக்கும்,

ஒரு மிக ஆழமான நிசப்தத்தை உருவாக்கும். அந்த ஆழமான நிசப்தத்தில் கடவுளின் இருப்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். அப்பொழுதுதான் கடவுள் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிய வரும். அதுவரை உங்களுக்கு தெரிந்ததெல்லாம் கற்பனை கடவுள்கள்தான்.

உண்மையான தியானத்தின் விளைவு தான் பிரார்த்தனை. தியானிப்பவர் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும். ஏனென்றால் அவர் அறிகிறார். ஏனென்றால் அவர் உணருகிறார்; காரணம், இப்போது கடவுளின் இருப்பு என்பது வெறும் பேச்சில் மட்டும் இருப்பது அல்ல. அனுபவ பூர்வமானது,

தியானத்திற்கு பிறகு பிரார்த்தனை வரட்டும். நீங்கள் தியானியுங்கள். தியானம் என்பது உங்கள் இதயத்தை தயார்ப்படுத்தும். அது உங்களை சுத்தப்படுத்தும். உங்கள் சிந்தனைகளில் இருந்து உங்களை சுத்தப்படுத்தும்,

காலங்காலமாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் தலையில் நீங்கள் தேக்கி வைத்திருக்கும் குப்பைகள் அனைத்தைகள் அது வெளியே தூக்கி எறியும்; 

தியானம் என்பது ஒரு ரோஜா படுக்கையை நிலத்தில் உருவாக்குவது போன்றது. பிரார்த்தனை என்பது ஒரு ரோஜாவைப் போன்றது.

முதலில் நீங்கள் நிலத்தை தயார்ப்படுத்த வேண்டும். களை எடுத்து நிலத்தை சுத்தப்படுத்த வேண்டும், அங்குள்ள கற்களை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும்.

நிலத்தை செம்மையாக்கும் வேலையை தியானம் செய்கிறது.
முதலில் நிலத்தை தயார்ப்படுத்துங்கள், அதன் பிறகு பிரார்த்தனை என்பது தானாகவே அதன் போக்கில் நடைபெறும்.

பிரார்த்தனை என்பது உங்களால் செய்ய முடியாத ஒரு விஷயம். ஆனால் தியானம் என்பது உங்களால் செய்ய முடிந்த விஷயம். ஏனென்றால், அது உங்கள் மனதைப் பொருத்தது. அதனைக் கொண்டு நீங்கள் ஏதேனும் செய்ய முடியும்.

பிரார்த்தனை என்பது கடவுளோடு சம்பந்தப்பட்டது. ஆனால், கடவுள் எங்கோ தள்ளி இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவருடைய விலாசம் என்ன? அவருடைய பெயர் என்ன? இந்தப் பிரார்த்தனை களை எங்கு அனுப்ப வேண்டும் ? எனவே, ஒன்றும் தெரியாமலேயே  நீங்கள் வெற்று ஆகாயத்தை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

இறுதியில் அவை அனைத்தும் பயனற்றது என்பதை உணருகிறீர்கள்.

முதலில் தியானத்தில் நீங்கள் உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். தியானம் என்றால் ஒரு சிந்தனையற்ற நிசப்தம், ஒரு சிந்தனையற்ற விழிப்புணர்வு, அமைதி.

அந்த அமைதி அங்கு இருக்கும் போது, ஒரு நாள் பிரார்த்தனை வெடிக்கிறது. உங்கள் இருத்தலில் ஒரு மொட்டு வெளிப்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள்,

உங்களுடைய இதயம் ஒரு பூவாக மலர்கிறது. அங்கே மிகுந்த நறுமணம் வீசுகிறது. அந்த நறுமணம் தான் பிரார்த்தனை.

நீங்கள் பாருங்கள், இப்போது கடவுள் தள்ளி இருக்கவில்லை, அவர் நெருக்கமாக இருக்கிறார் - உங்களுடைய மலர்ச்சி அதற்கான பாலத்தை அமைத்திருக்கிறது.

தியானம் இல்லாத பிரார்த்தனைகள் எல்லாம் வெறும் சம்பிரதாயமானவை, முட்டாள்தனமானவை. தியானம் இல்லாத பிரார்த்தனைகள் அர்த்தமற்றவை, நேரத்தையும், சக்தியையும். வாழ்க்கையையும் வீனாக்குபவை.

முதலில் நீங்கள் உங்கள் மீது அதிகளவு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே முழுக்க முழுக்க கவனம் செலுத்த வேண்டும்.

மனதை எப்படி கைவிடுவது மனதை முழுமையாக கைவிடும் போது - பிரார்த்தனை எழும், தியானிப்பவர்க்கு கிடைக்கும் வெகுமதி தான் பிரார்த்தனை. அது ஒரு விளைவு.

பிரார்த்தனையின் அர்த்தம் பிரபஞ்ச மனதுடன் கொள்ளும் உரையாடல் என்பது தான். உங்கள் மனதை கைவிடும் பொழுது பிரபஞ்ச மனம் உங்களுக்குள் எழும்.

காத்திருங்கள், பொறுமையாக இருங்கள், முதலில் அந்த உரையாடலுக்கு தேவையான தகுதியைப் பெறுங்கள், அதன் பிறகு நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை.

நீங்கள் நிசப்தமாக இருக்கும் போது உங்கள் இதயத்திற்குள் ஒரு மெல்லிய குரல் ஒலிப்பதை உங்களால் கேட்க முடியும்.

உண்மையில் அந்த உரையாடல் மறு பக்கத்திலிருந்து எப்போதும் கடவுளால் தொடங்கப்படும்.

உரையாடலை உங்களால் தொடங்க முடியாது. கேட்பவராக மட்டுமே உங்களால் இருக்க முடியும்;

அதற்கு ஒரு மிகப் பெரிய அளவில் பெற்றுக் கொள்ளும் திறன் தேவைப்படுகிறது. நீங்கள் தயாராகும் அந்தக் கணத்தில் சட்டென ஏதோ ஒரு விஷயம் சேர்ந்து மணியோசை ஆரம்பமாகிறது.

ஆனால் அந்த குரல் மறுபக்கத்திலிருந்து தான் வருகிறது. 

உங்களுக்கு எந்த பிரார்த்தனையும் தேவையில்லை. கடவுளின் குரலைக் கேட்கக் கூடிய அமைதியான இதயம்தான் உங்களுக்குத் தேவைப்படுகிறது. அவர் உங்களை அழைக்கிறார்.

நீங்கள் அவரை அழைக்க வேண்டியதில்லை. ஆழமான பெற்றுக் கொள்ளும் திறனோடு நீங்கள் வெறுமனே இருங்கள் அதைத்தான் தியானம் செய்கிறது.

அது உங்களை பெற்றுக் கொள்ள வைக்கிறது. அந்த பெற்றுக் கொள்ளும் தன்மையில் நீங்கள் கடவுள் பேசுவதை கேட்கத் தொடங்குகிறீர்கள்

உண்மையான பிரார்த்தனை என்பது கடவுள் உங்களிடம் பேசுவது. பொய்யான பிரார்த்தனை என்பது நீங்கள் கடவுளிடம் பேசுவது.

__ஒஷோ.