Tuesday, 4 February 2025

கடவுளிடம் பிரார்த்தனை செய்வது எப்படி? - OSHO

 கடவுளிடம் பிரார்த்தனை செய்வது எப்படி?


ஒருவன் கடவுளிடம் எதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்? கடவுளுக்கு உங்கள் பிரார்த்தனை தேவையில்லை. உங்கள் பிரார்த்தனைகள் வழக்கமாக உங்கள் ஆசைகளின் வெளிப்பாடாகவும், உங்கள் வேண்டுகோளாகவும், உங்களுடைய புகார்களை வெளிப்படுத்தக் கூடியதாகவும் தானே இருக்கும்.

பிரார்த்தனை என்ற பெயரில் மக்கள் இதைத்தானே செய்து கொண்டு இருக்கிறார்கள். புகார் சொல்வது, புகார் சொல்வது, புகார் சொல்லிக் கொண்டே இருப்பது. பிறகு "இப்படியெல்லாம் நடக்கக் கூடாது" என்று கடவுளுக்கே புத்தி சொல்லும் வகையில் புலம்பத் தொடங்கி விடுகிறீர்கள்.

அது மட்டுமல்லாமல் கடவுளைப் பற்றிய எந்த ஒரு அம்சமும் உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு தெரியாத ஒன்றிடம் உங்களால் எப்படி பிரார்த்திக்க முடியும்,  ஒரு தெரியாத கடவுளை உங்களால் எப்படி நேசிக்க முடியும்? உங்கள் பிரார்த்தனை என்பது வெறுமனே ஒரு சம்பிரதாயமாகத் தான் இருக்கும்.

கடவுள் இப்பொழுது முக்கியம் இல்லை. முதலில் உங்களுக்கு தேவை தியானம் மட்டுமே.

தியானம் என்பது முற்றிலும் வேறான ஒரு பரிமாணம். கடவுளுக்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை, அது முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தது. உங்கள் மனதைச் சார்ந்தது. அது உங்களுள் ஒரு அமைதியை உருவாக்கும்,

ஒரு மிக ஆழமான நிசப்தத்தை உருவாக்கும். அந்த ஆழமான நிசப்தத்தில் கடவுளின் இருப்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். அப்பொழுதுதான் கடவுள் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிய வரும். அதுவரை உங்களுக்கு தெரிந்ததெல்லாம் கற்பனை கடவுள்கள்தான்.

உண்மையான தியானத்தின் விளைவு தான் பிரார்த்தனை. தியானிப்பவர் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும். ஏனென்றால் அவர் அறிகிறார். ஏனென்றால் அவர் உணருகிறார்; காரணம், இப்போது கடவுளின் இருப்பு என்பது வெறும் பேச்சில் மட்டும் இருப்பது அல்ல. அனுபவ பூர்வமானது,

தியானத்திற்கு பிறகு பிரார்த்தனை வரட்டும். நீங்கள் தியானியுங்கள். தியானம் என்பது உங்கள் இதயத்தை தயார்ப்படுத்தும். அது உங்களை சுத்தப்படுத்தும். உங்கள் சிந்தனைகளில் இருந்து உங்களை சுத்தப்படுத்தும்,

காலங்காலமாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் தலையில் நீங்கள் தேக்கி வைத்திருக்கும் குப்பைகள் அனைத்தைகள் அது வெளியே தூக்கி எறியும்; 

தியானம் என்பது ஒரு ரோஜா படுக்கையை நிலத்தில் உருவாக்குவது போன்றது. பிரார்த்தனை என்பது ஒரு ரோஜாவைப் போன்றது.

முதலில் நீங்கள் நிலத்தை தயார்ப்படுத்த வேண்டும். களை எடுத்து நிலத்தை சுத்தப்படுத்த வேண்டும், அங்குள்ள கற்களை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும்.

நிலத்தை செம்மையாக்கும் வேலையை தியானம் செய்கிறது.
முதலில் நிலத்தை தயார்ப்படுத்துங்கள், அதன் பிறகு பிரார்த்தனை என்பது தானாகவே அதன் போக்கில் நடைபெறும்.

பிரார்த்தனை என்பது உங்களால் செய்ய முடியாத ஒரு விஷயம். ஆனால் தியானம் என்பது உங்களால் செய்ய முடிந்த விஷயம். ஏனென்றால், அது உங்கள் மனதைப் பொருத்தது. அதனைக் கொண்டு நீங்கள் ஏதேனும் செய்ய முடியும்.

பிரார்த்தனை என்பது கடவுளோடு சம்பந்தப்பட்டது. ஆனால், கடவுள் எங்கோ தள்ளி இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவருடைய விலாசம் என்ன? அவருடைய பெயர் என்ன? இந்தப் பிரார்த்தனை களை எங்கு அனுப்ப வேண்டும் ? எனவே, ஒன்றும் தெரியாமலேயே  நீங்கள் வெற்று ஆகாயத்தை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

இறுதியில் அவை அனைத்தும் பயனற்றது என்பதை உணருகிறீர்கள்.

முதலில் தியானத்தில் நீங்கள் உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். தியானம் என்றால் ஒரு சிந்தனையற்ற நிசப்தம், ஒரு சிந்தனையற்ற விழிப்புணர்வு, அமைதி.

அந்த அமைதி அங்கு இருக்கும் போது, ஒரு நாள் பிரார்த்தனை வெடிக்கிறது. உங்கள் இருத்தலில் ஒரு மொட்டு வெளிப்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள்,

உங்களுடைய இதயம் ஒரு பூவாக மலர்கிறது. அங்கே மிகுந்த நறுமணம் வீசுகிறது. அந்த நறுமணம் தான் பிரார்த்தனை.

நீங்கள் பாருங்கள், இப்போது கடவுள் தள்ளி இருக்கவில்லை, அவர் நெருக்கமாக இருக்கிறார் - உங்களுடைய மலர்ச்சி அதற்கான பாலத்தை அமைத்திருக்கிறது.

தியானம் இல்லாத பிரார்த்தனைகள் எல்லாம் வெறும் சம்பிரதாயமானவை, முட்டாள்தனமானவை. தியானம் இல்லாத பிரார்த்தனைகள் அர்த்தமற்றவை, நேரத்தையும், சக்தியையும். வாழ்க்கையையும் வீனாக்குபவை.

முதலில் நீங்கள் உங்கள் மீது அதிகளவு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே முழுக்க முழுக்க கவனம் செலுத்த வேண்டும்.

மனதை எப்படி கைவிடுவது மனதை முழுமையாக கைவிடும் போது - பிரார்த்தனை எழும், தியானிப்பவர்க்கு கிடைக்கும் வெகுமதி தான் பிரார்த்தனை. அது ஒரு விளைவு.

பிரார்த்தனையின் அர்த்தம் பிரபஞ்ச மனதுடன் கொள்ளும் உரையாடல் என்பது தான். உங்கள் மனதை கைவிடும் பொழுது பிரபஞ்ச மனம் உங்களுக்குள் எழும்.

காத்திருங்கள், பொறுமையாக இருங்கள், முதலில் அந்த உரையாடலுக்கு தேவையான தகுதியைப் பெறுங்கள், அதன் பிறகு நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை.

நீங்கள் நிசப்தமாக இருக்கும் போது உங்கள் இதயத்திற்குள் ஒரு மெல்லிய குரல் ஒலிப்பதை உங்களால் கேட்க முடியும்.

உண்மையில் அந்த உரையாடல் மறு பக்கத்திலிருந்து எப்போதும் கடவுளால் தொடங்கப்படும்.

உரையாடலை உங்களால் தொடங்க முடியாது. கேட்பவராக மட்டுமே உங்களால் இருக்க முடியும்;

அதற்கு ஒரு மிகப் பெரிய அளவில் பெற்றுக் கொள்ளும் திறன் தேவைப்படுகிறது. நீங்கள் தயாராகும் அந்தக் கணத்தில் சட்டென ஏதோ ஒரு விஷயம் சேர்ந்து மணியோசை ஆரம்பமாகிறது.

ஆனால் அந்த குரல் மறுபக்கத்திலிருந்து தான் வருகிறது. 

உங்களுக்கு எந்த பிரார்த்தனையும் தேவையில்லை. கடவுளின் குரலைக் கேட்கக் கூடிய அமைதியான இதயம்தான் உங்களுக்குத் தேவைப்படுகிறது. அவர் உங்களை அழைக்கிறார்.

நீங்கள் அவரை அழைக்க வேண்டியதில்லை. ஆழமான பெற்றுக் கொள்ளும் திறனோடு நீங்கள் வெறுமனே இருங்கள் அதைத்தான் தியானம் செய்கிறது.

அது உங்களை பெற்றுக் கொள்ள வைக்கிறது. அந்த பெற்றுக் கொள்ளும் தன்மையில் நீங்கள் கடவுள் பேசுவதை கேட்கத் தொடங்குகிறீர்கள்

உண்மையான பிரார்த்தனை என்பது கடவுள் உங்களிடம் பேசுவது. பொய்யான பிரார்த்தனை என்பது நீங்கள் கடவுளிடம் பேசுவது.

__ஒஷோ.

Friday, 27 December 2024

ஒரு மணிநேரம் தியானம் - osho

 கேள்வி : தினசரி ஒரு மணிநேரம் தியானம் செய்பவர் இந்தப் பிறவியிலேயே ஞானவிழிப்பு பெற வாய்ப்பு உண்டா?


ஓஷோ பதில்‬: உலகத்தில் வாழ்ந்த உண்மையான தியானிகள் ஒரு உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதாவது ஒருவன் ஞான விழிப்பு பெறுவதற்கு 48 நிமிடம் தொடர்ந்த தியானமே போதுமானது என்பதாகும்!

ஆனால் இது அவ்வளவு சுலபமில்லை!
ஒரே ஒருநிமிடம் (60 விநாடிகள்) உண்மையான மனக்குறுக்கீடு எதுவும் இல்லாமல் தியானம் செய்வது என்பது கடினமான காரியமாகும் ! 

ஆனால் முடியாதது அல்ல! இதை நீங்கள் பரிசோதனை செய்துப்பாருங்கள் .

கடிகாரத்தில் உள்ள விநாடி முள்ளை 1-லிருந்து 60 வினாடிக்கு நகருவதைக் கூர்ந்து கவனியுங்கள். 

அதை வெறுமனே சாட்சியாக கவனியுங்கள். 

அதிகபட்சமாக அந்த வினாடி முள் 10-ஐத் தாண்டுவதற்குள் உங்கள் கவனம் வேறு எங்கேயோ சென்றுவிடும்!

இதைக் கவனித்து மீண்டும் உங்கள் கவனத்தை அந்த முள்ளின்மேல் வைப்பதற்குள் மேலும் சில வினாடிகள் கழிந்துவிடும். 

இப்படி நாள்தோறும் பயிற்சி செய்தால், ஒரு சில நாட்களுக்குள் ஒரு நிமிட தியானத்தை நீங்கள் அமைதியாக இடைவெளியில்லாமல், கவனச் சிதைவு இல்லாமல் வெறுமனே செய்ய முடியும்.

ஆசார வழிமுறையும் இதுவேதான்.

நீங்கள் உங்கள் சுவாசத்தை வெறுமனே கவனித்துக் கொண்டிருக்கவேண்டும்.

இதைத்தான் புத்தர் கடைப்பிடித்தார். இது விஞ்ஞானப் பூர்வமானது. 

நீங்கள் வெறும் கவனிப்பவராக இருங்கள் போதும். 

இப்படி நீங்கள் 48 நிமிடம் தொடர்ந்து செய்துவிட்டால், நீங்கள் அன்றே ஞானவிழிப்பு அடைந்து விடலாம்!

ஆனால் நடைமுறையில் இந்த 48 நிமிட தியானத்தை அடைய பல வருடங்கள் ஆகலாம்! 

நீங்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக, வைராக்கியமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு சீக்கிரம் உங்களுக்கு ஞானவிழிப்பு கிட்டும்! 

நீங்கள் அந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் தன்மையில் மிகுந்த ஓய்வுத் தன்மையில், விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!

Wednesday, 1 May 2019

விழிப்புணர்வும் மையமும் --- ஓஷோ


விழிப்புணர்வும் மையமும் 

முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அனேக விஷயங்களை அறிகிறீர்கள். – அதாவது கடைகள், உங்களை கடந்து செல்லும் மக்கள், அங்குள்ள போக்குவரத்து இப்படி எல்லாவற்றையும் உணர்கிறீர்கள். நீங்கள் அனேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர்வதில்லை. – அதுதான், உங்களைப் பற்றி. நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது அநேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களை உணர்வதில்லை!. தன்னைப் பற்றிய இந்த விழிப்புணர்வினை ஜார்ஜ் குருட்ஜிப் தன்நினைவு (Self Remembering) என்று அழைக்கிறார். “இடைவிடாமல், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று குருட்ஜிப் கூறுகிறார்.
நீங்கள் என்ன செய்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் இடைவிடாமல் உங்களுக்குள் செய்து கொண்டு வாருங்கள்; நீங்கள்தான் அதைச் செய்கிறீர்கள் என்கின்ற விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் – உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் நடந்து செல்கிறீர்கள் – அப்போது உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கவனிக்கலாம். நீங்கள் பேசலாம். – எதுவாக இருந்தாலும், உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் கோபப்படும்போது நீங்கள்தான் கோபப்படுகிறீர்கள் என்று விழிப்புணர்வு கொள்ளுங்கள். இப்படி இடைவிடாமல் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது, ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது. நீங்கள் ஒன்று திரண்ட ஒரு உயிராக இருக்க ஆரம்பிக்கிறீர்கள்.
சாதாரணமாக, நீங்கள் ஒரு தொளதொள என்று இருக்கும் பை போல இருக்கிறீர்கள். உங்களிடம் கெட்டித் தன்மை இல்லை, உங்களிடம் மையம் இல்லை – உண்மையில் வெறுமனே ஒரு திரவத்தன்மை, எந்தவிதமான மையமும் இல்லாமல், அநேகப் தனித்தனியான பொருட்கள் இருப்பது போன்று இருக்கிறீர்கள். ஒரு கூட்டம், உங்களுக்குள் இடைவிடாமல் மாறிக்கொண்டும், இடம் பெயர்ந்துகொண்டும் உள்ளது. உங்களுக்குள் எஜமானன் என்பவர் இல்லை. விழிப்புணர்வுதான் உங்களது எஜமானன்.  நான் எஜமானன் என்பதை, உருவாக்குபவர் கட்டுப்படுத்துபவர் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. நான் எஜமானன் என்று கூறுவது, நீங்கள் வெறுமனே உங்களுக்குள் இருங்கள், தொடர்ந்து இடைவிடாது இருங்கள் என்கிற அர்த்தத்தில்தான். நீங்கள் எதைச் செய்தாலும் அல்லது செய்யாமல் சும்மா இருந்தாலும், உங்களது தன்னுணர்வில் நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற ஒரு விஷயம் மட்டும் இடைவிடாமல் இருக்கவேண்டும்.
ஒருவர் உள்ளே இருக்கிறார் என்கிற எளிய உணர்வு, ஒரு மையத்தை உருவாக்குகிறது. இது அசைவற்ற மையம், அமைதியின் மையம், அகந்தையை வென்ற மையமாக இருக்கும். அது உள்ளுக்குள் உள்ள சக்தி. நான் “உள்ளிருக்கும் சக்தி” என்று கூறும்போது, அதன் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அதனால்தான் புத்தர், “விழிப்புணர்வு என்னும் நெருப்பு” என்று பேசுகிறார். அது ஒரு நெருப்பு. நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்தால், நீங்கள் ஒரு புதிய சக்தியை உங்களுக்குள் உணர்வீர்கள். ஒரு புதிய நெருப்பை, ஒரு புதிய உயிரை உங்களுக்குள் உணர்வீர்கள். மேலும், இந்த புதிய உயிரினால், புதிய சக்தியினால், புதிய ஆளுமையினால், உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வந்த அநேக விஷயங்கள் வெறுமனே கரைந்து போய்விடும். நீங்கள் அவைகளோடு போராட வேண்டியதில்லை.
ஆனால் இப்போது நீங்கள் உங்களது கோபத்தோடு, உங்களது பேராசையோடு, உங்களது பாலுணர்வோடு போராட வேண்டியுள்ளது. ஏனெனில், நீங்கள் பலவீனர்களாக இருக்கிறீர்கள். எனவே, உண்மையில் கோபம், பேராசை, பாலுணர்வு இவைகள் எல்லாம் பிரச்னைகள் அல்ல; உங்களின் பலவீனம்தான் பிரச்னை. நீங்கள் உங்களுக்குள் இருப்பதை – நான் இருக்கிறேன் – என்று உணர ஆரம்பித்துவிட்டால், உங்களது சக்திகள் எல்லாம் ஒரே புள்ளியை நோக்கி ஒருமுகப்படுகின்றன, கெட்டிப்படுகின்றன. மேலும், அப்போது உங்களுக்குள் ஒரு ‘ஆன்மா’  பிறக்கிறது. இது, நான் என்னும் தன்முனைப்பு அல்ல என்றும், இது ஆன்மா என்றும் நினைவில் கொள்ளுங்கள். நான் என்னும் தன்முனைப்பு என்பது ஆன்மாவின் பொய்யான உணர்வாகும். ஆன்மாவைப் பெறாமலேயே, நீங்கள் ஆன்மாவைப் பெற்றிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் ஆணவம், நான் என்னும் தன்முனைப்பு. ஆணவம் என்பது பொய்யான ஆன்மா – நீங்கள் ஆன்மாவாக ஆகவில்லை என்றாலும்கூட நீங்கள் ஒரு ஆன்மா என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
சத்யத்தைத் தேடுபவரான மௌலிங்கப்புத்திரர் என்பவர் புத்தரிடம் வந்தார். புத்தர் அவரிடம், “நீங்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்டார்.
அதற்கு மௌலிங்கப்புத்திரர், “நான் எனது ஆன்மாவைத் தேடுகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.
தான் சொல்வதையெல்லாம் செய்வேன் என்று ஒரு வாக்குறுதி அளிக்கும்படி மௌலிங்கபுத்திரரிடம் புத்தர் கேட்டார். அதைக் கேட்ட மௌலிங்கபுத்திரர் அழுதார். அவர் புத்தரிடம், “என்னால் எப்படி வாக்கு கொடுக்க முடியும்? நான் என்பவன் இன்னமும் இல்லையே, எப்படி என்னால் வாக்குறுதி கொடுக்கமுடியும்? நாளை நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாக்குறுதி அளிக்ககூடிய அந்த ஆன்மாவை நான் இன்னும் பெற்றிருக்கவில்லை. எனவே முடியாத ஒன்றை நீங்கள் என்னிடம் கேட்காதீர்கள். நான் முயற்சி செய்கிறேன். அதிகபட்சம் நான் இதைத்தான் கூறமுடியும். நீங்கள் எதைச் சொன்னாலும், அதை நான் செய்கிறேன் என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் அதைச் செய்வது யார்? வாக்குறுதி கொடுக்கின்றதையும், வாக்குறுதியை நிறைவேற்றுகின்றதுமாகிய அந்த ஒன்றைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் அதைப் பெறவில்லை.” என்றார்.
அதைக் கேட்ட புத்தர், “மௌலிங்கப்புத்ரா, உன்னிடம் இந்த பதிலைக் கேட்பதற்காகத்தான் நான் இந்த கேள்வியைக் கேட்டேன். நீ என்னிடம் வாக்குறுதி அளித்திருந்தால், நான் உன்னை திருப்பி அனுப்பி இருப்பேன். நீ என்னிடம், “நான், நீங்கள் கூறுவதை செய்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்” என்று கூறியிருந்தால், உணமையிலேயே நீ ஆன்மாவைத் தேடுபவன் அல்ல என்பதை நான் அறிந்திருப்பேன். ஏனெனில் சாதகன் ஒருவன், எப்போதும் தான் இன்னும் அதை அடையவில்லை என்று அறிந்திருக்கவேண்டும். இல்லையெனில் தேடுவதன் நோக்கம் என்ன? நீ ஏற்கனவே அதுவாக இருந்தால், அதற்கு அவசியமே இல்லையே! நீ அதுவாக இல்லை! மேலும் ஒருவர் இதை உணர்ந்து கொண்டால், அதன்பிறகு அவரது ஆணவம் ஆவியாகப் போய்விடும்.” என்று பதில் கூறினார்.
நான் என்னும் ஆணவமானது, அங்கே இல்லாத ஏதோ ஒன்றினைப் பற்றிய தப்பான அபிப்பிராயம். ‘ஆன்மா’ என்றால், வாக்குறுதி அளிக்க முடிந்த ஒருமையம் என்று அர்த்தம். இந்த மையமானது, நீங்கள் இடைவிடாது தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலமாகத்தான் உருவாக்கப்படுகிறது. ஏதோ ஒன்றினைச் செய்யும்போது நீங்கள் விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்துகொண்டிருக்கலாம், இப்போது தூங்கப் போகலாம், அப்போது உங்களுக்கு தூக்கம் வரும். நீங்கள் தூக்கத்தில் விழலாம். இப்படி ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருங்கள். அதன்பிறகு, உங்களுக்குள் ஒருமையம் பிறந்துவிட்டதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்; அப்போது விஷயங்கள் கெட்டியாக ஆகிவிடும். அங்கே ஒரு மையத்திலிருத்தல் ஏற்பட்டுவிடும். இப்போது, எல்லாமே அந்த மையத்தோடு தொடர்புடையதாக இருக்கும்.
ஆனால் இப்போதோ, நாம் மையங்கள் இல்லாமல் இருக்கிறோம். சில நேரங்களில் நாம் மையத்தில் இருப்பது போன்று உணர்கிறோம். ஆனால், அந்தத் தருணங்கள், ஏதாவது ஒரு சூழ்நிலை உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதனால் உருவானதாக இருக்கும். திடீரென்று ஏதாவது சூழ்நிலை, ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் உங்களுக்குள் ஒரு மையத்தை உணர்வீர்கள். ஏனெனில், ஆபத்தில் நீங்கள் விழிப்புணர்வு பெறுவீர்கள். யாராவது ஒருவர் உங்களைக் கொலை செய்ய வரும்போது, உங்களால் அந்த நொடிப்பொழுதில் எதையும் சிந்திக்கமுடியாது, உங்களால் சுயநினைவு இல்லாமல் அந்த தருணத்தில் இருக்கமுடியாது. உங்களது சக்தி முழுவதும் மையம் கொண்டுவிடும். மேலும் அந்தத் தருணம் திடமானதாக ஆகிவிடும். உங்களால் கடந்த காலத்திற்கும் நகர முடியாது, எதிர்காலத்திற்கும் செல்லமுடியாது. அந்த நொடிப்பொழுதுதான் எல்லாமுமாக ஆகிவிடும். அதன்பிறகு, நீங்கள் உங்களை கொலை செய்ய வருபவனைப் பற்றி மட்டுமல்ல, உங்களைப் பற்றியும், அதாவது, கொலை செய்யப்படப் போகின்ற உங்களைப் பற்றியும் விழிப்புணர்வு கொள்வீர்கள்.
அதனால்தான், ஆபத்தான விளையாட்டுக்களுக்கு மக்களிடம் அதிக ஆதரவு இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள கௌரிசங்கரின் உச்சிக்குச் சென்றுவந்த யாரையாவது கேட்டுப் பாருங்கள். முதல்முறையாக ஹிலாரி அதை அடைந்தபோது, அவர் திடீரென்று அந்த மையத்தை உணர்ந்திருக்க வேண்டும். மேலும் முதன்முதலாக யாராவது நிலவில் காலடி எடுத்து வைத்தவுடன், திடீரென்று அந்த மையத்தைப் பற்றிய உணர்வு வந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆபத்தானவைகளுக்கு கவர்ச்சி உள்ளது. நீங்கள் காரை ஓட்டிக் கொண்டு போகிறீர்கள். அப்போது நீங்கள் வேகத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டு போகும்போது, அந்த வேகம் ஆபத்தானதாகிறது. அப்போது உங்களால் சிந்திக்க முடியாது. எண்ணங்கள் மறைந்து போகும். அப்போது நீங்கள் கனவு காண முடியாது. அப்போது நீங்கள் கற்பனையில் மிதக்க முடியாது. அப்போது நிகழ்காலம் என்பது திடமானதாக ஆகிவிடும். எந்த நேரத்திலும் மரணம் என்பது சாத்தியம் என்கிற அந்த ஆபத்தான நேரத்தில், திடீரென நீங்கள் உஙகளுக்குள் உள்ள அந்த மையத்தை உணர்வீர்கள். இப்படி ஆபத்தான சில வேளைகளில், நீங்கள் உங்களது மையத்தை உணர்வதால்தான், ஆபத்தானவை உங்களுக்கு கவர்ச்சியானதாகத் தெரிகிறது.
போர்கள் தொடர வேண்டும் என்று நீட்சே எங்கோ கூறியுள்ளார். ஏனெனில், போர்களால் மட்டுமே சில சமயம் உங்களது ஆன்மா உணரப் படுகிறது – ஒரு மையம் உணரப்படுகிறது – ஏனெனில் போர் என்பது ஆபத்தானது. மேலும் மரணம் என்பது உண்மை என்றாகிவிட்டால், வாழ்க்கை தீவிரமானதாக ஆகிவிடுகிறது. மரணம் மிகவும் நெருங்கி வரும்போது, வாழ்க்கை தீவிரமாக ஆகிவிடுவதால், நீங்கள் மையத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்ற எந்தத் தருணமும், அங்கே மையத்திலிருத்தல் ஏற்படுகிறது. ஆனால், அது ஏதாவது ஒரு சூழ்நிலையால் உருவானதாக இருக்குமென்றால், அதன்பின்னர் அந்தச் சூழ்நிலை முடிந்தவுடன் அது மறைந்து போய்விடும்.
அது, வெறுமனே ஏதோ ஒரு சூழ்நிலையால் உருவானதாக மட்டுமே இருக்கக் கூடாது. அது உங்களுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். ஆகவே, ஒவ்வொரு சாதாரண காரியத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போதுகூட இதை முயற்சி செய்து பாருங்கள் – அப்போது அந்த உட்கார்ந்திருப்பவரைப் பற்றி விழிப்புடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியைப்பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்திருக்கும் அறையைப் பற்றி மட்டுமல்ல, சுற்றிலும் உள்ள வெளியைப் பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களைப் பற்றியும் விழிப்புணர்வுடன் இருங்கள். உங்களது கண்களை மூடிக் கொண்டு உங்களை உணருங்கள்; உங்களுக்குள் ஆழமாகத் தோண்டி உங்களை உணர்ந்து பாருங்கள்.
ஈகன் ஹெரிக்கல் என்பவர், ஒரு ஜென்குருவிடம் கற்று வந்தார். மூன்று வருடங்களாக அவர் வில்வித்தை கற்று வந்தார். ஆனால், அந்த குருவோ எப்போது பார்த்தாலும், “நீ செய்வது நன்றாகத் தான் உள்ளது. ஆனால் இது போதாது.” என்பார். ஹெரிக்கல் இப்போது ஒரு வில் வித்தைக்காரராக ஆகி விட்டார். அவரது குறி, நூறு சதவீதம் சரியாக இருந்தது. என்றாலும்கூட, அந்த குரு, “நீ நன்றாகத் தான் செய்கிறாய். ஆனால் இது போதாது.” என்று கூறுவார்.
அதைக் கேட்ட ஹெரிக்கல், “இப்படி நூறு சதவீதம் தவறாமல் அம்பு எய்தாலும் போதாதா? அப்படியானால், உங்களது எதிர்பார்ப்புதான் என்ன? நான் எப்படி இன்னும் முன்னேற முடியும்? நூறு சதவீத துல்லியத்தைவிடவும் நீங்கள் இதற்குமேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த ஜென்குரு, “எனக்கு உனது வில் வித்தையைப் பற்றியும், உனது குறி பார்க்கும் திறனைப் பற்றியும் கவலை இல்லை. எனது கவலை, உன்னைப் பற்றிதான். நீ முழு தொழில்நுட்ப கலைஞர் ஆகிவிட்டாய். ஆனால் உனது வில்லை விட்டு உனது அம்பு வெளியே செல்லும்போது, நீ உன்னைப் பற்றிய விழிப்புணர்வுடன் இல்லை. இது உபயோகமற்றது! அம்பானது குறியைச் சென்றடைவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு உன் மீதுதான் அக்கறை! உனது வில்லில் இருந்து அம்பு புறப்படும்போது, உனக்குள்ளும் உனது தன்னுணர்வானது அம்பாக வேண்டும். வெளியில் நீ உனது குறியை தவறவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் நீ உனக்குள் உள்ள அந்த இலக்கினை தவறவிடக் கூடாது. ஆனால், இப்போது நீ அதை தவறவிட்டு விடுகிறாய். நீ ஒரு தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப கலைஞன் ஆகிவிட்டாய். ஆனால் நீ செய்வதெல்லாம் மற்றவர்களைப் பார்த்து, அதைப் போல செய்வதாகும்.” என்று கூறினார். ஆனால் மேலை நாட்டு மனதை அல்லது நவீனகால மனதை உடையவருக்கு இதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. இது முட்டாள்தனம் போலத் தெரிந்தது. குறி பார்த்து அம்பு விடுவதுதான் வில் வித்தையின் திறமையாகும்.
கொஞ்சம் கொஞ்சமாக ஹெரிக்கல் ஏமாற்றம் அடைந்தார். எனவே ஒருநாள் அவர் வந்து, “நான் சென்று வருகிறேன். இது என்னால் முடியாது! இது சாத்தியப் படாது! நீங்கள் ஏதாவது ஒன்றை குறி பார்க்கும்போது, உங்களது விழிப்புணர்வு உங்களது குறியை நோக்கித் தான் செல்லும். அந்தப் பொருளை நோக்கித் தான் செல்லும். மேலும், நீங்கள் வெற்றிகரமான ஒரு வில் வித்தைக் காரராக இருந்தால், நீங்கள் உங்களை மறந்து விட வேண்டும். நீங்கள் இலக்கை மட்டுமே நினைக்க வேண்டும். மற்றவற்றை மறந்துவிட வேண்டும். இலக்கு மட்டுமே அங்கு இருக்க வேண்டும்.” என்றார். ஆனால் அந்த ஜென்குருவோ, ஹெரிக்கலிடம் மீண்டும் அவர் தனக்குள் மற்றொரு இலக்கினை உருவாக்கும்படி தொடர்ந்து நிர்பந்தித்தார். அந்த அம்பானது இருமுனை கொண்டதாக இருக்க வேண்டும். ஒருமுனை வெளியில் உள்ள இலக்கினை குறி பார்த்துக் கொண்டும், மறுமுனை இடைவிடாமல் உங்களுக்கு உள்ளே உள்ள இலக்கினை அதாவது, ஆன்மாவை குறி பார்த்தும் இருக்கவேண்டும், என்றார்.
“அப்படியானால் நான் போகிறேன். எனக்கு இது சாத்தியப்படாது போல் தெரிகிறது. உங்களது நிபந்தனைகளை என்னால் நிறைவேற்ற முடியாது”. என்று கூறினார். எனவே புறப்படுகின்ற அந்த நாளில், அவர் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் குருநாதரிடம் விடைபெற்று செல்ல வந்திருந்தார். அப்போது அந்த குரு வேறு யாரோ ஒருவருக்கு இலக்கினை குறி பார்க்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். முதல்முறையாக ஹெரிக்கல் அதில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். அவர் விடைபெறுவதற்காகவே வந்திருந்தார். அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். குரு, தான் கற்றுக் கொடுப்பதை நிறுத்தியவுடன் ஹெரிக்கல் அவரிடம் கூறிவிட்டு விடை பெறலாம் என்று இருந்தார்.
ஆனால் அப்போது திடீரென அவர் அந்த குருவையும், அவரது இருமுனை கொண்ட தன்னுணர்வையும் கண்டு கொண்டார். அப்போது குரு குறிபார்த்துக் கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளாக ஹெரிக்கல் இதே குருவுடன் கூட இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் அவர் தனது சொந்த முயற்சி பற்றிதான் அக்கறை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் இந்த குருவைப் பார்த்தது இல்லை; இந்த குரு என்ன செய்கிறார் என்று பார்த்தது இல்லை. முதன்முறையாக அவர் அப்போது குருவை பார்த்து அதை உணர்ந்தார். அப்போது தானாகவே, திடீரென்று அவரிடமிருந்து வில்லை வாங்கினார். இலக்கினை குறி பார்த்தார். அதன்பின்னர் அம்பை விட்டார். அப்போது அந்த குரு, “சரி, முதல்முறையாக நீ அதைச் செய்துவிட்டாய், நான் மிகவும் சந்தோஷமடைகிறேன்.” என்றார்.
ஹெரிக்கல் செய்தது என்ன? முதல்முறையாக, அவர் தனக்குள் மையம் கொண்டிருந்தார். அவரது இலக்கும் இருந்தது, ஆனால் கூடவே அவரும் இருந்தார் – அவரும் ஆஜராகி இருந்தார்.
எனவே, நீங்கள் எதைச் செய்தாலும் – என்னவாக இருந்தாலும், அது வில்வித்தையாகத் தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை – நீங்கள் எதைச் செய்தாலும், வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தாலும்கூட, அப்போது இருமுனை அம்பாக இருங்கள். வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அதோடுகூட, உங்களுக்குள் இருப்பவர் யார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
லின்-சீ, ஒருநாள் காலையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று யாரோ ஒருவர், “எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள்: நான் யார்?” என்று கேட்டார். லின்-சீ கீழே இறங்கி வந்து அந்த மனிதரை நோக்கி சென்றார். அந்த முழு அறையும் மிகவும் அமைதியானது. அவர் என்ன செய்யப் போகிறாரோ? இது ஒரு எளிய கேள்விதான். இதற்கு அவர் தனது இருக்கையில் இருந்தே பதில் அளித்திருக்கலாம். அவர் அந்த ஆளிடம் வந்தார். அந்த அறையே அமைதியாக இருந்தது. லின்-சீ கேள்வி கேட்டவரின் முன்பு, அவரின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றார். அது ஒரு ஊடுருவிச் செல்கிற தருணமாக இருந்தது. எல்லாமே நின்று விட்டது. கேள்வி கேட்டவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. லின்-சீ அவரது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது லின்-சீ அவரிடம், “என்னிடம் கேட்காதே. உனக்குள் சென்று இந்தக் கேள்வியைக் கேட்பவன் யார் என்று கண்டுபிடி. உனது கண்களை மூடிக் கொள். ‘நான் யார்’ என்று கேட்காதே. உனக்குள் சென்று, இந்தக் கேள்வியைக் கேட்பது யார் என்று கணடுபிடி. உள்ளே உள்ள கேள்வி கேட்பவர் யார்? என்னை மறந்துவிடு. கேள்வியின் மூலத்தைக் கண்டுபிடி. உனக்குள் ஆழ்ந்து செல்!” என்றார்.
அப்போது அந்த மனிதன் கண்களை மூடிக் கொண்டு, அமைதியாகி விட்டதாகவும், மேலும் திடீரென்று அவன் மெய்ஞானம் பெற்றவன் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவன் கண்களைத் திறந்தான், சிரித்தான், லின்-சீயின் காலைத் தொட்டு வணங்கினான். மேலும் அவரிடம், “நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள். நான் ஒவ்வொருவரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டு வந்தேன். அப்போது எனக்கு அநேக பதில்கள் கொடுக்கப் பட்டன. ஆனால் எதுவும் அதற்கான பதிலாக நிரூபணம் ஆகவில்லை. ஆனால் இப்போது நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள்.” என்றான்.
“நான் யார்?” இதற்கு, யாரால் பதில் அளிக்க முடியும்? ஆனால், அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் – கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அமைதியாக இருக்கும்போது, குண்டூசி விழும் சப்தம்கூட கேட்கும். அந்த அமைதியில் – லின்-சீ கீழே இறங்கி வந்து, தனது ஊடுருவும் கண்களால் அவனைப்பார்த்து, அதன்பிறகு அவனிடம், “உனது கண்களை மூடிக்கொள். உனக்குள் போ. போய், கேள்வி கேட்கும் அந்த நபர் யார் என்று கண்டுபிடி. நான் பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காதே. கேள்வி கேட்டவர் யார் என்று கண்டுபிடி.” என்றார். அப்போது, அந்த மனிதனும் கண்களை மூடிக் கொண்டான். அந்தச் சூழ்நிலையில் நடந்தது என்ன? திடீரென்று அவன், அவனது மையத்திற்குச் சென்றுவிட்டான். திடீரென்று அவன் தனக்குள் உள்ள அந்த நடுப்பகுதி குறித்து விழிப்புணர்வு பெற்று விட்டான்.
இது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது. மேலும், விழிப்புணர்வு என்பதற்கு இப்படி உங்களுக்குள் உள்ள அந்த நடுப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை என்று அர்த்தம். நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வு இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களிடமிருந்து மிகவும் அதிக தூரம் விலகி இருக்கிறீர்கள். அதே போன்று, நீங்கள் எந்த அளவுக்கு அதிக தன்னுணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வருவீர்கள். உங்களது தன்னுணர்வு முழுமையாக ஆகிவிடும்போது, நீங்கள் உங்களது மையத்தில் இருப்பீர்கள். உங்களது தன்னுணர்வு குறைவாக இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பீர்கள். நீங்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பதால், அங்கே உங்களது மையம் முற்றிலுமாக மறக்கப் பட்டு விடுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளில் தான் நீங்கள் நகர்ந்து செல்வது சாத்தியமாகும்.
நீங்கள் வட்டத்துக்குள் வெளிப்பரப்பிற்கு நகர்ந்து செல்லலாம். – அதன்பிறகு, நீங்கள் தன்னுணர்வற்ற நிலைக்கு நகர்ந்து செல்வதாகிவிடும். உட்கார்ந்துகொண்டு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதும், எங்கோ உட்கார்ந்துகொண்டு இசையை கேட்டுக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்களை மறந்து போக முடியும், – அப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள். அதே போன்று, பகவத்கீதையை படிக்கும்போதும் அல்லது பைபிள் அல்லது குரானை படிக்கும்போதும் நீங்கள் உங்களை மறந்து போக முடியும் – இப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள்.
நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமெனில், அதன்பிறகு நீங்கள் மையத்தை நெருங்கி வருவீர்கள். அதன்பின்னர், ஒருநாள் திடீரென்று நீங்கள் அந்த மையத்தில் இருப்பீர்கள். அதன்பிறகு உங்களுக்கு சக்தி வந்துவிடும். அந்த சக்திதான் நெருப்பு. இந்த பிரபஞ்சம் முழுவதும், இந்த உயிர்கள் அனைத்தும் அந்த சக்தியுடன்தான், அந்த நெருப்புடன்தான் உள்ளது. நெருப்பு என்பது பழைய பெயர். இப்போது அவர்கள் அதை மின்சாரம் என்று அழைக்கின்றனர். மனிதன் அதை அநேக அநேக பெயர்களால் அடையாளமிட்டு வந்திருக்கிறான். ஆனால் நெருப்பு என்பது சிறந்தது. மின்சாரம் என்றால் கொஞ்சம் உயிரற்றது போலத் தெரிகிறது. ஆனால் நெருப்பு என்னும்போது, அது உயிர்த்துடிப்புள்ளதாகத் தெரிகிறது.
எனவே நிறைமனதுடன் செயலாற்றுங்கள். இது ஒரு நீண்ட கடினமான பயணம். மேலும், ஒரு சிறு நொடிப் பொழுதுகூட விழிப்புணர்வுடன் இருப்பது கடினம். இந்த மனம் இடைவிடாது கண் சிமிட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று அல்ல. இது கடினமானது, இது சிரமமானது. ஆனால் இது சாத்தியமில்லாதது அல்ல. இது சாத்தியமானது. நம் ஒவ்வொருவருக்கும் இது சாத்தியப்படும். முயற்சி மட்டுமே தேவை; உள்ளம் நிறைந்த முயற்சி மட்டுமே தேவை. எதையும் விட்டு வைக்கக் கூடாது; உங்களுக்குள் எதுவும் தொடப்படாமல் விட்டு வைக்கப்படக் கூடாது. விழிப்புணர்வுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். அதன்பிறகு மட்டுமே, அந்த உள் ஒளிச் சுடர் கண்டுபிடிக்கப் படும். அது அங்கேதான் உள்ளது.
இப்போது இருக்கின்ற மதங்களிலோ அல்லது இனிமேல் இருக்கப் போகின்ற மதங்களிலோ உள்ள முக்கியமான ஒற்றுமையை ஒருவன் தேடிச் சென்றால், அங்கே இந்த விழிப்புணர்வு என்கிற ஒரு சிறு வார்த்தைதான் கண்டு கொள்ளப் படும்.
இயேசு ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரிய வீட்டின் எஜமான் வெளியில் சென்றார். அப்போது அவர் தனது வேலைக்காரர்களிடம், தான் எந்த நேரத்திலும் திரும்பி வந்துவிடுவதாகவும், அவர்கள் இடைவிடாது எப்போதும் உஷாராக விழித்திருக்கும்படியும் கூறி விட்டுச் சென்றார். ஆகவே, ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதாயிற்று. எஜமான் எந்த வேளையிலும் வரலாம்! ஒரு குறிப்பிட்ட நேரமோ, குறிப்பிட்ட தேதியோ, குறிப்பிட்ட வேளையோ கிடையாது. ஒரு குறிப்பிட்ட தேதி இருந்தால் அப்போது நீங்கள் அதுவரை தூங்கலாம். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் செய்துவிட்டு, எஜமான் வருகின்ற அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் உஷாராக இருந்தால் போதும். ஆனால் எஜமானனோ, “நான் எந்த நேரத்திலும் வருவேன். இரவும் பகலும் என்னை வரவேற்பதற்கு நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்”. என்று கூறிவிட்டு போய் விட்டார்.
வாழ்க்கையின் கதையும் இதுதான். நீங்கள் எதையும் ஒத்திப் போட முடியாது, எந்த நேரத்திலும் எஜமான் வரலாம். ஒருவர், இடைவிடாது விழிப்புடன் இருக்கவேண்டும். எந்த குறிப்பிட்ட தேதியும் இல்லை. அந்த திடீர் நிகழ்வு எப்போது நடக்கும் என்றும் ஒன்றுமே தெரியாது. எனவே, ஒருவர் ஒரே ஒரு காரியம் மட்டுமே செய்ய முடியும். அதுதான் விழித்துக் கொண்டு காத்திருப்பது.
விழிப்புணர்வுதான், ஒருவர் தனக்குள் மையத்தில் இருப்பதற்கான செயல்நுணுக்கம்; உள் நெருப்பை அடைவதற்கான செயல் நுணுக்கம். அது, உள்ளேதான் மறைந்து உள்ளது.. அதை கண்டுகொள்ள முடியும். மேலும், அந்த மையத்தை, அந்த நெருப்பை நாம் கண்டு கொண்டால் மட்டுமே, நாம் கோவிலுக்குள் நுழைகின்ற தகுதி பெற்றவராக ஆவோம். – அதற்கு முன்பு அது ஒருபோதும் கிடையாது.
ஆனால், நாம் அடையாளக் குறியீடுகளின் மூலம் நம்மை ஏமாற்றிக் கொள்ள முடியும். அடையாளக் குறியீடுகள் நமக்கு ஆழ்ந்த உண்மைகளை காட்டுவதற்காக உள்ளன. ஆனால் நாம் அதை ஏமாற்று வித்தைகளாகப் பயன்படுத்த முடியும். நாம் ஊதுபத்தி கொளுத்தி வைக்கலாம். நாம் வெளியில் உள்ள பொருட்களை வணங்கலாம். அதன்பிறகு, நாம் ஏதோ செய்துவிட்டோம் என்று நீங்கள் உங்களை சமாதானம் செய்து கொள்ளலாம். நாம் சமயநெறி இல்லாதவர்களாக இருந்து கொண்டே, சமயநெறி உள்ளவர்களாக உணர்ந்து கொண்டு போகலாம். இதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூமி இப்படித்தான் ஆகிவிட்டது. தங்களுக்குள் உள்ள அந்த அக நெருப்பை கண்டு கொள்ளாமலேயே, மக்கள் தாங்கள் வெறுமனே வெளி அடையாள குறியீடுகளை பின்பற்றுவதன் மூலம், தாங்கள் மிகவும் சமயநெறி மிக்கவர்களாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் தோல்வி அடைந்தாலும்கூட, முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருக்கையில், நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வி அடைவீர்கள்;  ஆனால் உங்களது தோல்வியும்கூட உங்களுக்கு உதவ முடியும். உங்களால் ஒரு சிறு நொடிகூட விழிப்புணர்வோடு இருக்க முடியாமல் தோற்றுப் போவதுகூட நீங்கள் எந்த அளவிற்குத் தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்த முடியும்.
நீங்கள் தெருவில் நடந்து செல்லுங்கள். அப்போது, தன்னுணர்வோடு உங்களால் ஒருசில அடிகள் கூட நடந்து செல்ல முடியாது. மீண்டும் மீண்டும் நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். ஒரு விளம்பரப் பலகையை படிக்கும்போது, நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். யாராவது ஒருவர் உங்களைக் கடந்து செல்வார்., நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள். அதன்பிறகு நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள்.
உங்களது தோல்விகள், உங்களுக்கு உதவுபவை. நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு அவைகள் காட்ட முடியும். மேலும், நீங்கள் தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்கின்ற அந்த ஒரு சிறு விழிப்புணர்வு பெற்றாலே போதும். அப்போது நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை சம்பாதித்ததாகிவிடும். ஒரு பைத்தியக்காரன், தான் ஒரு பைத்தியம் என்கிற விழிப்புணர்விற்கு வந்துவிட்டால், அவன் புத்தி சுவாதீனத்தின் பாதையில் செல்வதாகிவிடும்.

Wednesday, 20 June 2018

நேசிப்பதற்காகவே நேசி ....Osho


நீ ஒருவரை நேசித்தால்
நீ அவரை எல்லா
குற்றங்குறைகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறாய்..
ஏனெனில்
அவை அவரின் பாகங்கள்
ஆனால் அவை மாற ஆரம்பிக்கும்
நினைவில் கொள்
அன்பு ஒருபோதும் மாற்ற முயற்சி செய்யாது,
ஆனால் அது மாற்றிவிடும்.
நீ நேசித்தால் அது புரட்சியை கொண்டுவரும்
ஆனால் அது காலடி சப்தம் கூட கேட்காத அளவு
மிக அமைதியான முறையில்
அந்த மாறுதலை கொண்டு வரும்
யாருக்கும் என்ன நிகழ்கிறது என்றுகூட தெரியாது,
ஆனாலும்
எல்லாமும், மிகவும் அமைதியாக,
மொட்டு மலர்ந்து மலராவது எப்படி யாருக்கும் தெரியாமல்
சப்தமில்லாமல் நிகழ்கிறதோ
அது போல மாறிவிடுவது நிகழும்
நீ நேசிக்கும் மனிதரை மாற்ற ஒருபோதும் முயற்சி செய்யாதே
ஏனெனில்
அந்த முயற்சியே உன்னுடைய நேசம் முழுமையானதாக இல்லை
நீ அந்த மனிதரின் ஒரு பகுதியைத்தான் நேசிக்கிறாய்,
மற்றொரு பகுதியை நேசிக்கவில்லை என்பதை காட்டிவிடுகிறது
நான் உன்னை நேசிக்கிறேன்,
ஆனால் உன்னுடைய மூக்கு எனக்குப் பிடிக்கவில்லை,
உன்னை எனக்குப் பிடிக்கும்,
ஆனால்
உன்னுடைய முகம் எனக்குப் பிடிக்கவில்லை
என்று சொல்வது போல இருக்கும்
ஒரு மிகவும் குண்டான பெண் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது,
இதுவரை ஒரே ஒருவர்தான் என்னை நேசிப்பதாக சொன்னார்,
ஆனால்
அவரும் நான் உன்னுடைய ஆன்மாவை நேசிக்கிறேன்,
உன்னுடைய உடலை அல்ல என்று கூறினாள்
நீ நேசிக்கும்போது வெறுமனே
நேசி
அந்த நேசம் மாறுதலை கொண்டு வந்தால் சரி
அப்படி அது மாறுதலை கொண்டு
வரவில்லையென்றாலும் சரிதான்
நீ நேசிப்பதற்காகவே நேசி போதும் 

Monday, 15 August 2016

ஞானம் பிறக்க ....


பிறப்பும், இறப்பும் சரி விகிதத்தில் இருக்கும்போது ஞானம் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தான் இருக்கிறதே தவிர சரிவிகிதமாக இல்லையே....!!! ஏன் இந்த தாமதம்....???
ஞானம் தாமதிப்பதில்லை ஆனால், நாம் தான் தள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
புத்தத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், புத்தரைப் போல ஆக வேண்டும் எனபதில் தான் சிக்கல் இருக்கிறது.
ஞானத்தைப் பற்றிய ஏராளமான புனைக் கதைகளால் நாம் நிரபபப் பட்டிருக்கிறோம்.
அது தான் ஞானம் தெளிவதற்கு தடையாக இருக்கிறது.
ஞானிகள் அடைந்த பெயர், புகழ், நடை, உடை, பாவனை, அற்புதங்கள் செய்யும் திறன், இவைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.
மனமானது தந்திர உபயங்கள் நிரம்பியது. அதனால் தொடர்ந்து அது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க முயற்சிக்கிறது.
நாம் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளாகவே பதிலும் இருக்கிறது.
ஆனால், மனம் நுணுகி செல்லாமல் மேலோட்டமாகவே நின்றுகொண்டு கேள்வி வந்த உடன் புறத்தில் கேட்டக் கற்றுக் கொண்டிருக்கிறது.
ஏனெனில், கேள்வி கேட்பதும் ஞானம் என்று சொல்லப்பட்டிருப்பதால் கேள்வியே ஞானம் என்று தவறான முடிவுக்கு வந்துவிடும் பழக்கமாகிவிட்டது.
மனதிற்குள் பதிலை தயார் நிலையில் வைத்துவிட்டு தான் கேள்வியானது புறத்தில் எழுகிறது.
ஆனால், மனம் நுணுகி செல்ல மறுப்பதால் புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறது.
பதிலை தெரிந்த பிறகு கேள்வியும், பதிலும் வேறு வேறாக இல்லாமல், இணைந்தே இருபது தெரிய வரும்.
அப்படி தெரிய விடாமல் செய்வது மனம் தான்.
எப்படி என்றால், மனம் ஏதோ ஒரு வழியில் அடையாளங்களை பிடித்து வைத்திருக்கிறது.
அந்த அடையாளங்களை வைத்துக்கொண்டு பதிலை தேட முயற்சிப்பதால் தான் பதில் கிடைத்தும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.
இன்னும் வேறு ஒருவரிடம் கேட்டால் தெளிவு பிறக்கும் என்று எண்ணி வாழ்க்கை முழுவது தேடுதலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.
மனம் தேடுதலை முடித்துக் கொள்ள தயார் நிலையில் இருப்பதில்லை.
இன்னும் கொஞ்சம் ஆழமாகவும், அகலமாகவும் செல்லலாமே என்று சமாதானம் செய்து கொண்டு தன் தந்திரத்தை உயிர்பித்துக் கொள்கிறது.
இது புரியாமல் நாமும் மனதின் வழியே சென்று பயணித்து காலத்தால் விரக்தி நிலையை மனம் எய்துகிறது.
அதன்பின் ஞானம் குழப்பம் என்ற முத்திரையும் கொடுத்து விடுகிறோம்.
இது யார் தவறு.....???
மனதின் தவறா....???
இல்லை ஞானத்தின் தவறா.....???
"சிந்தித்தே தெளிவோம்"

Sunday, 7 August 2016

திருமணம் Vs சுதந்திரம் Osho

திருமணமும் செய்து கொண்டு சுதந்திரமாகவும் இருப்பதென்பது சாத்தியமா
கடினம்தான். ஆனால் அசாத்தியமானதல்ல. சற்றே புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும். சில அடிப்படை உண்மைகளை முதலில் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று இன்னாருக்கு இன்னார் என்று யாரும் யாருக்காகவும் பிறக்கவில்லை. இரண்டாவது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உங்களின் கோட்பாடுகளை நிறைவேற்றுவதற்காக யாரும் இங்கு வரவில்லை. மூன்றாவது உங்கள் அன்புக்கு நீங்கள்தான் அதிகாரி. எனவே நீங்கள் விரும்பும் வரை வழங்க முடியும். ஆனால் மற்றவர்களிடமிருந்து அன்பை நீங்கள் வற்புறுத்தி பெற முடியாது. ஏனெனில் மற்றவர் உங்கள் அடிமையல்ல. இந்த எளிய உண்மைகளை புரிந்து கொண்டால் நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் ஆகாதவராக இருந்தாலும் சேர்ந்திருக்க முடியும். ஒருவருக்கொருவர் விட்டுத் தர முடியும். ஒருவர் மற்றவரின் தனித்தன்மையில் ஒருபோதும் குறுக்கிடாதிருக்கமுடியும்.
உண்மையில் கல்யாணம் என்பது காலாவதியாகிப்போன ஒரு நிறுவனம். முதலாவதாக, எந்த நிறுவனத்தின் உள்ளேயும் வாழ்வது நல்லதல்ல. எந்த விதமான அமைப்பும் அறிவுபூர்வமானதே. கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கான எல்லா சாத்தியங்களையும் திருமணமானது ஏறக்குறைய அழித்து விட்டிருக்கிறது. முற்றிலும் பயனற்ற காரணங்களுக்காக. எனவே முதல் விஷயமே, திருமணமே – திருமண சடங்கே கூட – போலித்தனமானதுதான்.
திருமணத்தை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். வினையாக எடுத்துக் கொண்டால் சுதந்திரம் சாத்தியமேயில்லை. திருமணத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் – அது ஒரு விளையாட்டுத்தான். கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் பாருங்கள். வாழ்க்கை மேடையில் நீங்கள் நடிக்கும் பாத்திரமே திருமண வாழ்க்கை. ஆனால் அது வாழ்க்கையின் ஒரு அங்கமல்ல. அதற்கு எந்த வித யதார்த்தமும் கிடையாது. அது ஒரு கட்டுக்கதை. ஆனால் கட்டுக்கதையையே யதார்த்தம் என்று எடுத்துக் கொள்ளுமளவுக்கு மக்கள் மூடர்களாக இருக்கிறார்கள். 
கண்களில் கண்ணீருடன் கதை படிக்கும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். கதை நிகழ்ச்சிகள் அவ்வளவு சோகமாக போகிறதாம். திரைப்பட அரங்குகளில் விளக்குகளை அணைத்துவிடுவது மிக நல்ல உபாயம்தான். இதனால் எல்லோராலும் சிரித்து, அழுது, வருந்தி, மகிழ்ந்து, படத்தை ரசிக்க முடிகிறது. வெளிச்சம் இருந்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று இருக்கும். அதே சமயம் திரை காலியாக உள்ளது. அதில் யாரும் இல்லை என்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அது வெறுமனே ஒளிவீச்சால் தோற்றுவிக்கப்படும் படம்தான். ஆனால் அவர்கள் அதை சுத்தமாக மறந்துவிடுகிறார்கள். இதேதான் நம் கதையிலும் நடக்கிறது. வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய பல விஷயங்களை நாம் விவகாரமாக எடுத்துக் கொள்கிறோம். அவ்விதமான காரியநோக்கிலிருந்தே நம் பிரச்னை தொடங்குகிறது.
முதலில் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஒருவரை காதலியுங்கள். ஒருவருடன் வாழுங்கள். இது உங்களின் அடிப்படை உரிமைகளில் அடங்கும். நீங்கள் ஒருவருடன் வாழவும் முடியும் ஒருவரை காதலிக்கவும் முடியும்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல. இங்கேதான் இது சூழ்ச்சிக்கார புரோகிதர்களால் சாமியார்களால் நடத்தப்படுகிறது. ஆனால் சமுதாயத்துடனான விளையாட்டில் நீங்கள் சேர்ந்துகொள்ள விரும்பினால், அதேசமயம் தனிப்பட்டு நிற்க விரும்பினால், உங்கள் மனைவியிடமோ, கணவரிடமோ இந்த திருமணம் வெறும் விளையாட்டுத்தான் என்பதை தெளிவாக்கி விடுங்கள். ஒருபோதும் இதை பிரச்னைக்குரியதாக எடுத்துவிடாதே. திருமணத்திற்கு முன்பு இருந்தமாதிரியே நான் சுயேச்சையாகத்தான் இருப்பேன். நீயும் திருமணத்திற்கு முன்பு இருந்தது போலவே சுயேச்சையாக இரு. உன் வாழ்வில் நான் குறுக்கிடப் போவதில்லை. என் வாழ்வில் நீயும் குறுக்கிடாதே. நாம் நண்பர்களாக சேர்ந்து வாழ்வோம். நம் சந்தோஷத்தை, சுதந்திரத்தை பகிர்ந்து கொள்வோம். ஒருவர் மற்றவருக்கு பாரமாக மாற மாட்டோம்.
எந்த கணத்தில் வசந்தம் ஓய்ந்து விட்டதாக, தேனிலவு தேய்ந்து விட்டதாக நாம் உணர்கிறோமோ அக்கணமே மேற்கொண்டு நடிக்கத் தொடங்காத அளவுக்கு ஒருவரிடம் ஒருவர் பின்வருமாறு சொல்லி விடுமளவுக்கு நேர்மையாக இருப்போம். “நாம் நிரம்ப காதலித்தோம், என்றென்றும் ஒருவருக்கொருவர் நன்றியுடன் இருப்போம், நாம் காதலித்த நாள்கள் பொன்னான நாள்களாக நம் நினைவுகளிலும் கனவுகளிலும் நம்மைத் தொடர்ந்து வரும். ஆனால் வசந்தம் முடிந்து விட்டது. நாம் பிரிய வேண்டிய இடம் வந்துவிட்டது. இது வேதனையாக இருந்தாலும் இனியும் நாம் சேர்ந்து வாழ்வது அன்பின் அடையாளமாக இருக்காது. நான் உன்னை காதலிப்பது உண்மையென்றால் என் காதல் உனக்கு துன்பமாக மாறிவிடுவதை கண்ட அக்கணமே நான் உன்னை விட்டு நீங்கி விடுவேன். நீ என்னை உண்மையாக காதலித்தால் உன் காதல் எனக்கு சிறையாக மாறுகிறது என்பதை காணும் அக்கணமே நீ என்னை விட்டு நீங்கி விடுவாய்.”
அன்பே வாழ்வின் உன்னத மதிப்பீடாகும். மூடச்சடங்குகளாக அதை தாழ்த்தி விடக்கூடாது. அன்பும் சுதந்திரமும் ஒன்றிணைந்தே செல்லும் – ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றதை விட்டுவிட முடியாது. சுதந்திரத்தை அறிகிற மனிதர் அன்பு நிறைந்தவராய் இருப்பார். அன்பை அறிகிற மனிதர் எப்போதுமே சுதந்திரம் தர சித்தமாய் இருப்பார். நீங்கள் நேசிக்கும் ஆளுக்கே சுதந்திரம் வழங்க உங்களால் முடியாவிட்டால் வேறு யாருக்குத்தான் சுதந்திரம் தருவீர்கள் சுதந்திரம் தருவது என்பது பூரணமாய் நம்புவதே தவிர வேறல்ல. சுதந்திரம் என்பது அன்பின் வெளிப்பாடு.
எனவே திருமணம் ஆனவராயினும் ஆகாதவராயினும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா திருமணங்களுமே போலியானவைதான். சம்பிரதாய வசதிக்காகத்தான். உங்களை சிறைப்படுத்தி ஒருவருடன் ஒருவரை பிணைத்துப் போடுவதல்ல அவற்றின் நோக்கம். இருவரும் சேர்ந்து வளர்வதற்கு உதவுவதே அவற்றின் நோக்கம். ஆனால் வளர்ச்சிக்கு சுதந்திரம் அத்தியாவசியம். ஆனால் கடந்த காலத்தின் எல்லா கலாசாரங்களுமே, சுதந்திரம் இல்லையென்றால் அன்பு மரணமடைகிறது என்பதை மறந்து விட்டன.

Friday, 8 July 2016

அன்புள்ள அப்பா - சுஜாதா

அப்பா அன்புள்ள அப்பா

இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதி இருப்பது ஒரு அற்புதம்! நீளம் ஒரு பிரச்சினை இல்லை என்றால் படியுங்கள்
செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார்.
“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”
“என்னப்பா வேணும் உனக்கு?”
“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”
சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.
பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.
நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.
பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”
“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”
“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”
“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”
“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.
காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.
பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”
“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”
“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”
ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக் கவ்வியது.
கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.
“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”
படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்? “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா? “ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”
மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”
ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.
ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.
“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”
“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்!”
எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…
ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப் போய்க் கேட்கிறேன்.
“என்னப்பா?”
“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.
If I had strength enough to hold a pen, I would write how easy and pleasant it is to die.
பொய்!
ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?
காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.
ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.
“பேர் சொல்லுங்கோ”
“சீனிவாசரா..”
“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச் பெட்டர நௌ. டோண்ட் ஒர்ரி!” புதுசாக பல்மனரி இடீமா (pulmonary oedema) என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.
சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.
காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”
உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி!”
“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes, we do not exist”.
ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்!”
சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” – இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.
“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.
சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.
Ask Rangarajan about Bionics!
ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது!
# சுஜாதா